தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த 4-ம்தேதி முதல் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருவதுடன் ஆங்காங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முகவர்களாக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2.38 லட்சம் பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு 6,12,78,008 படிவங்கள், அதாவது 95.58 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் கடந்த 21-ம்தேதி தெரிவித்தது. அவற்றில் 1,84,72,503 படிவங்கள் அதாவது 28.81 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி, திருநங்கை வாக்காளர்களுக்கு வாக்காளர் படிவங்கள் நிரப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இச்சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் போது வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் தேவையான உதவிகளை செய்ய இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. தற்போது வரை 4,81,284 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 9,464 திருநங்கை வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் வினியோகிக்கப்பட்டன. அவர்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், டிசம்பர் 9-ந்தேதி தொடங்கும் உரிமைகோரலின் போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லாத திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக உதவி மையங்கள் ஏற்பாடு செய்ய மாவட்ட தேர்தல்அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.