

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) ஒரு பகுதியான, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம்தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராக இணைத்துக்கொள்ள ஒரு மாத காலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக ஜனவரி 18-ந்தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.ஆனால், வரைவு வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் இடம் பெறவில்லை என்ற புகார்கள் எழுந்ததை அடுத்து, வாக்காளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 4 நாட்கள் அதாவது கடந்த டிசம்பர் 27, 28, ஜனவரி 3, 4ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 27, 28-ம்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் 2 நாட்கள் அதாவது, கடந்த டிசம்பர் 27, 28-ம்தேதிகளில் நடந்தது. இந்த 2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 3 மற்றும் 4-ந்தேதி) மீண்டும் ‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறும்’ என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
மேலும் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.