

தமிழகத்தில் SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த பணி கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலின்படி தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரைச் சேர்க்க படிவத்தை பூர்த்தி செய்து உறுதி மொழி சான்றிதழ் கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம் என்றும் இந்த பணி ஜனவரி 18-ந் தேதி வரை நடக்க உள்ளதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வாக்காளர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கொடுக்காத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கும் பணியினையும் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் ஜனவரி 18-ம் தேதி வரைக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாதவர்கள், புதிதாக உங்கள் பெயரை சேர்க்க நினைப்பவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அதில் திருத்தம் மேற்கொள்ள நினைப்பவர்கள் அனைவருக்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 நாட்கள் அதாவது, டிசம்பர் 27, 28-ம்தேதி(நேற்று) மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
உங்களுடைய வாக்குச்சாவடிகளுக்கு சென்று உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்த்து கொள்ளவும், பெயர் இல்லாதவர்கள் உங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை புதிதாக சேர்க்க வேண்டும் அல்லது வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சில படிவங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
அதாவது முகவரி மாற்றம், பெயர் மாற்றம் போன்றவற்றிற்கு வெவ்வேறு படிவங்கள் அதாவது படிவம் 6, 6A, 7, 8, 8A உள்ளன. எந்த விதமான மாற்றத்திற்கு எந்த படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.
படிவம் 6 :
படிவம் 6ஐ யாரெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
* புதிய வாக்காளராக இணைவதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் இணைவதற்கு படிவம் 6ஐ பயன்படுத்தலாம். இதற்கு முன்னால் இருக்கக்கூடிய வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருந்து வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மட்டுமே படிவம் 6ஐ பயன்படுத்த முடியும். அல்லது புதிய வாக்காளராகத்தான் நீங்கள் இணைய முடியும்.
கடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தவர்கள் அந்த வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கும். அந்த எண்ணை அவர்கள் குறிப்பிட வேண்டும். படிவம் 6ஐ பூர்த்தி செய்யும் போது remarks என்ற பகுதியில் கடந்த வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இருந்தது ஆனால் வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடை பெயர் இல்லை, இது என்னுடைய வாக்காளர் அடைய எண் என்பதை குறிப்பிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த நகலையும் படிவத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
* ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாறியவர்களும் இந்த படிவம் 6ஐ பயன்படுத்த வேண்டும்.
* 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது பூர்த்தியானவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
* வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய குடிமக்கள் படிவம் 6A பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
படிவம் 6ல் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
சான்றிதழ்
பிறப்பு சான்றிதழ், 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்று சான்றிதழ் என இவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
முகவரி சான்று
ஆதார் அட்டை, ரேசன் கார்டு, மின் கட்டண ரசீது, குடிநீர் வரி ரசீது(அல்லது) வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.
படிவம் 7
படிவம் 7ஐ யாரெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
* உங்களது பெயர் இரண்டு இடங்களில் இருக்கும் பட்சத்தில், படிவம் 7ஐ பயன்படுத்தலாம். அதேபோல் உங்கள் குடும்பத்தில் வேறு ஒருவரின் பெயரை நீக்கவோ, உறவினரின் பெயரை நீக்கவோ படிவம் 7ஐ பயன்படுத்தலாம்.
* தன்னுடைய பெயரை நீக்குவது, இறந்தவரின் பெயரை நீக்குவது, வசிப்பிடம் மாறிய காரணத்தால் வேறொரு நபரின் பெயரை நீக்க கோருபவர்கள் படிவம் 7ஐ பயன்படுத்தலாம்.
படிவம் 8 :
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உங்களது சுயவிவரங்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்காக படிவம் 8ஐ பயன்படுத்தலாம். அதாவது உங்களது பெயர், பிறந்த தேதி, உங்களது கணவர் அல்லது தந்தை பெயரில் உள்ள எழுத்துப்பிழையை திருத்துவதற்காக மட்டும் படிவம் 8ஐ பயன்படுத்தலாம்.
படிவம் 8A
* ஒரே சட்டமன்ற தொகுதியாக இருந்து, ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெருவிற்கு குடியேறியவர்கள் அதாவது இடம் மாறியவர்கள் படிவம் 8A பயன்படுத்தலாம். ஒரே சட்டமன்ற தொகுதி ஆனால் வாக்குச்சாவடி மட்டும் மாறுபவர்கள் படிவம் 8Aஐ பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர்கள் தங்களது விண்ணங்களை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் படிவம் 6ஐ வாங்கி பூர்த்தி செய்து உங்கள் ஏரியாவில் உள்ள BLOவிடம் கொடுத்தும் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பின் முகவரி மாறியவர்கள்...
* திருமணத்திற்கு பின் வேறு முகவரிக்கு சென்றவர்களும் படிவம் 6ஐ தான் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இவர்கள் படிவம் 6ல் Remarks என்ற பகுதியில் திருமணத்திற்கு பிறகு முகவரி மாற்றம் என்று குறிப்பிட்டு உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
தேவைப்பட்டால் அதனுடைய நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். அதாவது வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, திருமணத்திற்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாதபட்சத்தில் நீங்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 18-ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஜனவரி 18-ம் தேதியுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.