
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் அதிக எடையுள்ளதாக இருப்பதால், இதனைக் கையாள்வது சற்று சிரமமாக இருக்கும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தைப் போக்கும் விதமாக சென்னை ஐஐடி நிறுவனம் அதிநவீன மற்றும் எடை குறைந்த சக்கர நாற்காலியைத் தயாரித்துள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. போரில் காயமடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக கையாளும் வகையில் இந்த நவீன சக்கர நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரிம்பிள் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையிலான சக்கர நாற்காலியைத் தயாரிக்க ஆய்வு மேற்கொண்டது சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு. இந்த ஆய்வின் முடிவில் ‘ஒய் டி ஒன்’ எனும் அதிநவீன சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளது ஆராய்ச்சிக் குழு.
சென்னை ஐஐடி ஸ்டார்ட் அப் நிறுவனமான த்ரைவ் மொபிலிட்டி நிறுவனம், அதிநவீன சக்கர நாற்காலிகளை வணிக ரீதியாக தயாரிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தானது. இந்திய இராணுவ மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, “போரில் கால்களை இழந்து தவிக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘ஒய் டி ஒன்’ சக்கர நாற்காலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐஐடியில் தொடர்ந்து பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இது நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய வேண்டும். குறிப்பாக கிராமப்புற மக்கள் மற்றும் தொலைதூர மக்களுக்கு ஐஐடி கண்டுபிடிப்புகள் பயன்பட வேண்டியது அவசியம்” என தெரிவித்தார்.
சக்கர நாற்காலி குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “பொதுவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள் அனைத்தும் 17 கிலோ வரையிலான எடையுடன் இருக்கும். இதனைப் பயன்படுத்துவதும், கையாள்வதும் சற்று சிரமமாகவே இருக்கும். ஆனால் சென்னை ஐஐடி வடிவமைத்துள்ள அதிநவீன சக்கர நாற்காலியின் எடை இதில் பாதியளவு தான். அதாவது வெறும் 8.5 கிலோ எடை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாற்காலி உலகத் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பானது மற்றும் உறுதியானது.
இதுபோன்ற அதிநவீன சக்கர நாற்காலிகளை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தால் ரூ.2.40 இலட்சம் வரை செலவாகும். ஆனால் சென்னை ஐஐடி தயாரித்த சக்கர நாற்காலியின் விலை ரூ.75,000 மட்டுமே. விரைவில் இதற்கான உற்பத்தி தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்று அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சக்கர நாற்காலியின் அறிமுக நிகழ்ச்சியில் ஐஐடி பொறியியல் துறை உதவிப் பேராசிரியரும், நவீன சக்கர நாற்காலி வடிவமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளருமான மணீஷ் ஆனந்த், அகில இந்திய மருத்துவ ஆராயச்சி கவுன்சில் விஞ்ஞானி ரவீந்திரநாத் மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.