
நகரமயமாக்கல் மேலோங்கி வரும் இன்றைய நிலையில், கான்கிரீட் வலிமையாக இருப்பது மிக அவசியம். கான்கிரீட்டை உருவாக்க இரும்பு, மணல், ஜல்லி, சிமெண்ட் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட மூலப்பொருள்கள் பயன்படுகின்றன. மாறி வரும் தொழில்நுட்ப உலகில் கான்கிரீட்டை மேலும் வலிமையாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிமெண்டிற்கு ஏற்ற வேதியியல் கலவைகள தகுந்த அளவில் கலப்பது கூட கான்கிரீட்டின் வலிமையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அவ்வகையில் உணவுக் கழிகளும் கான்கிரீட்டை வலிமையாக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது பார்ப்போம்.
பொதுவாக கான்கிரீட்டின் வலிமையை அதிகரிக்க தண்ணீரை ஊற்றி பாத்தி கட்டுவது மற்றும் ஈரமான சாக்குப் பைகளை போடுவது என சில உத்திகளைத் தான் பலரும் பின்பற்றுவோம். இவையெல்லாம் கான்கிரீட்டை உருவாக்கிய பிறகு செய்யும் சில நடைமுறைகள். ஆனால் கான்கிரீட்டை உருவாக்கும் சமயத்தில் சிமெண்டில் சில வகையான உணவுக் கழிகளைக் கலப்பதன் மூலம், அதன் வலிமையை அதிகரிக்க முடியும் என இந்தூர் ஐஐடி நிறுவனம் கண்டுபிடித்தது.
கட்டடங்கள் உறுதியாக பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்க, கான்கிரீட் வலிமையானதாக இருக்க வேண்டும். தற்போதுள்ள கட்டுமான நடைமுறைப்படி உருவாக்கப்படும் கான்கிரீட்டுகளின் வலிமை உறுதியுடன் தான் உள்ளன. இருப்பினும் இதன் வலிமையை மேலும் அதிகரிக்க பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்தூர் ஐஐடி நிறுவனம் இதற்கான ஆராய்ச்சியில் இறங்கியது. ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த தகவல் உண்மையில் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கான்கிரீட்டின் வலிமையை அதிகரிக்க அதிக பொருள் செலவில் எதையும் செய்ய வேண்டாம். வெறும் உணவுக் கழிவுகளே போதும் என சொல்கிறது இந்தூர் ஐஐடி. இதன்படி சிமெண்டில் நோய்க்கிருமி இல்லாத பாக்டீரியாக்களைக் கலந்தால், கான்கிரீட்டின் வலிமை இருமடங்காக அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
செயல்படும் விதம்:
அழுகிய உணவுக் கழிவுகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடு, கான்கிரீட்டில் இருக்கும் கால்சியம் அயனிகளுடன் வினைபுரிகிறது. இதனால் கால்சியம் கார்பனேட் படிகங்கள் உருவாகின்றன. கான்கிரீட்டில் இருக்கும் விரிசல்கள் மற்றும் துளைகளை இந்தப் படிகங்கள் எளிதாக நிரப்பி விடும். கான்கிரீட்டில் உள்ள துளைகள் நிரம்பியதும், பாக்டீரியாக்கள் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இதனால் கட்டுமானத்திற்கு சேதாரமோ, பாதிப்போ ஏற்படாது. மேலும் கான்கிரீட் எடையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அவற்றை வலிமையானதாக மாற்றுகின்றன.
அழுகிய பழக் கழிவுகள், வெந்தயத்தின் தண்டு, காலிஃப்ளவர் தண்டு, உருளைக்கிழங்கு தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோல் ஆகியவை கான்கிரீட் வலிமைக்கான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கழிவுகள் அனைத்தும் ஈரப்பதமான நிலையில், தூளாக பதப்படுத்தப்படுகின்றன. பிறகு தண்ணீருடன் நன்றாக கலக்கப்பட்டு நிலையான திரவத்தை உருவாக்குகின்றன. இந்த திரவத்தை கான்கிரீட் உருவாக்கத்தின் போது சிமெண்டில் கலக்க வேண்டும்.
உணவுக் கழிவுகள் உரங்களால் பயன்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டுமானத்திற்கும் உதவுகிறது என்ற தகவல் நிச்சயமாக இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கட்டுமானத்திற்கு பலம் சேர்க்கும் உணவுக் கழிவுகள், ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளதே தவிர இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் கூடிய விரைவிலேயே பயன்பாட்டிற்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.