

தமிழத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வான விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாகவும் அதன் வழியே சென்றால் மறுபிறவி இருக்காது என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் தான் 108 வைணவ தலங்களில் முதன்மையானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்றது.
சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்த வகையில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று அதிகாலை காலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.
அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார். பக்தர்கள் ‘ரங்கா ரங்கா’ என்ற கோஷம் முழங்கிய படியே ரெங்கநாதரை பின்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.
அதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வந்த நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி இன்று நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
பின்னர் இன்று இரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் இரவு 1.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல் தமிழகத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக கடந்து சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.