

மாதந்தோறும் ஏகாதசி விரதம் வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் மார்கழியில் வரும் ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ என அழைப்பது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசியில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் ‘சொர்க்கவாசல்’ எனப்படும் ‘பரமபத வாசல்’ திறக்கப்படுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் சொர்க்கவாசல் மிகவும் பிரசித்தி பெற்றது. எப்போதுமே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் பிரம்மோற்சவம் மற்றும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு சிறப்பு நிகழ்வுகளுக்கு பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். நடப்பாண்டில் வைகுண்ட ஏகாதசி வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்கு திறந்து வைக்கப்படுவது வழக்கம். இந்த பத்து நாட்களிலுமே பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரிக்கும். இந்நிலையில் நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் எத்தனை நாட்கள் திறந்திருக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையிலான 10 நாட்களுக்கு திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆண்டுதோறும் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கப்படும். மேலும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்.
வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோகம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். மேலும் தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக புரோக்கர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதால், பக்தர்கள் யாரையும் நம்ப வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதியில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதோடு அன்றைய தினத்தில் வழக்கத்தை விட அதிக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இன்னும் வைகுண்ட ஏகாதசிக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் முன்கூட்டியே அறிவித்திருப்பது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலையிலேயே சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பதால், அதற்கு முந்தைய தினமே பக்தர்கள் திருப்பதிக்கு வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.