உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்..! - திமுக-வை மீட்டெடுக்க ஸ்டாலின் கையில் எடுத்த புதிய ஆயுதம்!

Stalin
Stalin
Updated on

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்த திராவிடக் கட்சிகளை விட அதிக இடங்களைப் பெற்று பெரும்பின்மைக்குத் தேவையான கட்சிகளின் ஆதரவுடன் அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடித்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். இதன் தலைவர் சி. ஜோசப் விஜய் சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று தமிழக முதல்வர் பதவியிலும் அமர்ந்து விட்டார்.

இந்த நிலையில் தமிழக மக்களுக்கு பல நலத் திட்டங்களை அளித்து வந்த முந்தைய அரசான திமுக, தாங்கள் தோல்வியடைய என்ன காரணம் என்பதை அலசி ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக தொண்டர்கள் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான முகஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியதன் காரணம் புரியாமல் கலங்கி நிற்கின்றனர்.

தற்போது எதிர்கட்சியாக பொறுப்பேற்றுள்ள திமுக கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் காணொளி (video) ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் இனி கட்சியின் நன்மைக்காக என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பகிர்ந்து கொள்ள ஒரு இணையதள முகவரியையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வெப்சைட்டில் ஒலிப்பதிவாகவும் அல்லது எழுத்துப் பதிவாக நமது கருத்துக்களை கூறலாம். இது நேரடியாக ஸ்டாலின் கவனத்துக்கு செல்லும் என்றும் சிறந்த கருத்துக்கள் அங்கீகரிக்கப்படும் என்றும் இதனால் கட்சி தனது குறைகளைக் களைந்து மேலும் செம்மையுற உதவும் என்றும் கட்சி சார்பில் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் அவர்கள் தங்கள் கட்சியின் தோல்விக்கான கலந்தாய்வு செய்யும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தங்கள் தோல்விக்கான காரண, காரியத்தை கட்சியை தாண்டி பொதுமக்களிடமும் கேட்டறிய வேண்டும் என்பதை கலந்து ஆலோசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலினின் எக்ஸ் தளக் காணொளியில் இருந்து.

எல்லோருக்கும் வணக்கம். சின்ன கேப்பிற்கு பிறகு உங்களிடம் வீடியோவில் பேசுகிறேன். கடைசியாக டீ லிமிடேஷன் பற்றி பேசு இருந்தேன். அதைத் தொடர்ந்து தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ரிசல்ட் வந்துவிட்டது. ரிசல்ட் பிறகு என்னவெல்லாம் நடந்தது; என்ன நடக்கிறது என்பதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இரண்டு வாரமாக எல்லா வீடுகளிலும் நியூஸ் சேனல் தான் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகுது.

2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இது நிச்சயமாக நாம் எதிர்பார்த்த முடிவல்ல. இதற்கு அவர் காரணம் இவர் காரணம் என்று யாரும் யார் மேலேயும் பழி போடாதீர்கள். தலைவராக இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். வெற்றி கிடைக்கும் பொழுது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேர்கிறது. அதுபோல் தோல்வியடையும் பொழுதும் அதை நான்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.

சரி தோற்று விட்டோம் இனி அதையே நினைத்துக் கொண்டு முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் நாம் எல்லோரும் மீண்டு வர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேண்டும். எலெக்சன் ஆக இருந்தாலும் கரக்சன் ஆக இருந்தாலும் உங்களிடம் தான் வந்தாக வேண்டும். மக்கள் தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக இன்னும் எப்படி எல்லாம் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அதை சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களை ஓபனாக சொல்லுங்கள். அதற்காகத்தான் இந்த 'உடன்பிறப்பின் குரல்' வெப்சைட் (https://udanpirapinkural.in). இந்த வெப்சைட்டில் உங்கள் கருத்துக்களை பதிவிடுவது ரொம்ப சிம்பிள்.

உங்கள் வாய்ஸிலேயே பேசி கருத்துக்களை பதிவிட்டால் அதுவே டைப் ஆகி வரும் அல்லது நேரடியாக நீங்களே டைப் செய்தும் கருத்துக்களை சொல்லலாம். இல்லையென்றால் நீங்கள் பேப்பரில் எழுதி அந்த போட்டோவை அப்லோட் செய்யலாம். டாக்குமெண்டாக அனுப்பலாம். இந்த கருத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துவிடும். அதை எல்லாம் படித்து பரிசீரித்து நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை வடிவமைக்கப் போகிறேன். நம்மளுடைய அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும். காலத்திற்கு ஏற்ற மாதிரி எவால்வு ஆகித்தான் ஆக வேண்டும்.

உங்கள் கருத்து பின்னாடி வரும் கட்சியினுடைய எல்லா லெவல்களிலும் தேவையான மாற்றங்களை செய்யப்போகிறேன். இதனால் அடுத்த நூறாண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும். உங்களுக்காக இயங்கும். உடன் பிறப்பே நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்கிறேன்'' என பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான திமுகவுக்கு யதார்த்தம் புரியவில்லை – முதல்வர் விஜயின் அட்டாக்!
Stalin
logo
Kalki Online
kalkionline.com