
இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீட்டிலும் சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர் தான் பயன்பாட்டில் உள்ளது. பாரத், இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. அதேபோல் கேஸ் அடுப்புகளும் பலவிதமான பிராண்டுகளில் கிடைக்கின்றன. இதில் எந்த பிராண்ட் தரமானது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ‘ஸ்டார் மதிப்பீடு வழங்கும் திட்டம்’ வருகின்ற 2026 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேஸ் அடுப்புகளின் நீடிக்கும் திறன், சூடாக்கும் திறன் மற்றும் தரத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்டார் மதிப்பீடு வழங்கப்பட உள்ளது. மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஆற்றல் திறன் பணியகத்துடன் இணைந்து மத்திய அரசு இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. இதன்மூலம் சந்தையில் நம்பகமான மற்றும் தரமான கேஸ் அடுப்புகளைத் தேர்ந்தெடுக்க பொதுமக்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.
ஒரு கேஸ் அடுப்பு ஒரு குறிப்பிட்ட எரிவாயுவில் எந்த அளவிற்கு சூடாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது இந்த சோதனையில் மதிப்பிடப்படும். இந்தத் திட்டம் வருகின்ற 2026 ஜனவரி 1 முதல் 2028 டிசம்பர் 31 வரை மூன்று ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும். ஒரு கேஸ் அடுப்பு குறைந்தபட்சம் 68% வெப்பத் திறனைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் 1 ஸ்டார் ரேட்டிங்காவது கிடைக்கும்.
ஸ்டார் ரேட்டிங் ஸ்டிக்கர் அடுப்பின் மீது ஒட்டப்படும். இதனைப் பார்த்து தரமான மற்றும் நீண்ட காலம் உழைக்கக் கூடிய அடுப்புகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் குறைந்த எரிவாயுவில் அதிக வெப்பத் திறன் கிடைப்பதால், சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு காலியாகமால் இருக்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு கேஸ் அடுப்பு 68% முதல் 70% வரையிலான வெப்பத் திறனைக் கொண்டிருந்தால் 1 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும். வெப்பத் திறன் அதிகரிக்க அதிகரிக்க ஸ்டார் ரேட்டிங்கும் அதிகரிக்கும். இதன்மூலம் சிலிண்டர் எரிவாயு நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் இந்தத் திட்டம் உகந்ததாக இருக்கும்.
ஒவ்வொரு கேஸ் அடுப்பு மாதிரியின் சோதனை அறிக்கைகளை மத்திய அரசிடம் உற்பத்தியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), தேசிய அங்கீகார வாரியம் (NABL), ஆசியா பசிபிக் அங்கீகார ஒத்துழைப்பு அமைப்பு (APAC) மற்றும் சர்வதேச ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு (ILAC) ஆகிய சோதனை ஆய்வகங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மட்டுமே கேஸ் அடுப்பு வெப்பத் திறன் சோதனை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு கேஸ் அடுப்பும் குறைந்தபட்ச வெப்பத் திறன் வரம்புகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.