
வழக்கமாக காடுகளின் அருகில் உள்ள கிராமங்களுக்குள் விலங்குகள் புகுந்து தாக்குதல் நடத்துவது இயல்பான ஒரு நிகழ்வு தான். இது போன்ற சூழல்களில், விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படும் போது, அவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. புலி - மனிதன் இடையேயான சந்திப்பில், புலி மனிதர்களை கடுமையாக தாக்கியோ அல்லது கொன்றோ விடுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற மத்தியப் பிரதேச மாநில அரசு ஒரு முடிவெடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒன்பது புலிகள் காப்பகங்களின் இடைநிலை மண்டலங்களில் வேலி அமைக்க மாநில அரசு முடிவு செய்து , அதற்கு ₹145 கோடி நிதி ஒதுக்கியும் உள்ளது. இது குறித்த தகவலை மத்தியப் பிரதேச மாநில துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா அறிவித்துள்ளார். வனப்பகுதியின் எல்லைக்கும், கிராமங்களின் எல்லைக்கும் நடுவில் வன விலங்குகளும், மனிதர்களும் சந்திக்கும் இடங்கள் இடைநிலை மண்டலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மனிதர்களின் நடமாட்டத்தை தடுக்கவும் இடைநிலை மண்டலத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டம் மூன்று நிதியாண்டுகளில் 2025-26, 2026-27 மற்றும் 2027-28 செயல்படுத்தப்படும். மாநிலத்தில் உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 526 லிருந்த புலிகளின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் 785 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம் கடந்த சில ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. மாநிலத்தில் உள்ள ஒன்பது புலிகள் காப்பகங்களில் இந்தப் புலிகள் பரவியுள்ளன. 2006 ஆம் ஆண்டில் 306 புலிகளும், 2010 இல் 257 புலிகளும், 2014 இல் 308 புலிகளும், 2022 இல் 726 புலிகளும் பதிவாகியுள்ளன.
புலிகளின் தாக்குதல்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலத்தில் பந்தவ்கர் புலிகள் சரணாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புகுந்து ஒரு பழங்குடியின மனிதரை புலி தாக்கியுள்ளது. இன்னொரு சம்பவத்தில் காட்டில் மஹுவா பூக்களை சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் புலியால் கொல்லப்பட்டான். அதே புலி அடுத்த நாள் பிபாரியா இடையக மண்டலத்தில் ரீட்டா என்ற பெண்ணைத் தாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் கன்ஹா புலிகள் காப்பகத்தில் பதிவாகியுள்ளன.
2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் புலியின் தாக்குதல்களால் 27 பேர் உயிரிழந்தனர். இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 46 ஆக உயர்ந்துள்ளது. அரசு விதிகளின்படி வனவிலங்குகள் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹2 லட்சம் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சமும், சிறிய காயங்களுக்கு ₹25,000 வரையிலான மருத்துவச் செலவுகள் செய்யப்படுகின்றன.
சமீபத்திய தொடர்ச்சியான புலியின் தாக்குதல்கள் காரணமாக மாநில அரசு இந்தத் திட்டத்தை விரைவாகக் கொண்டு வந்துள்ளது. 2025 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் மட்டும் நான்கு மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வேலி அமைப்பதோடு மட்டுமல்லாமல் ரோந்து, இழப்பீடு, தடுப்பு நடவடிக்கைகளின் பயன்பாடு மற்றும் மின்சார வேலி ஆகியவை அடங்கும்.