

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சுதந்திர தேவி சிலை உலகப் புகழ் பெற்றது. அமெரிக்காவின் முக்கிய அடையாளமாக இது உள்ளது. 1886ம் ஆண்டு அமெரிக்காவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பிரான்ஸ் நாடு இந்த பிரம்மாண்ட சிலையை அன்பளிப்பாக வழங்கியது. இந்த சுதந்திர தேவியின் உருவம் அமெரிக்க கண்டத்தில் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறது. இதனால் , இதை அச்சு அசலாக பிரதி எடுத்து சுதந்திரதேவியின் நகல் சிலைகளை மற்ற நாடுகளும் நிர்மாணித்து உள்ளன.
பிரேசில் நாட்டில் சுதந்திர தேவியின் பிரதி சிலை ஒன்று, அங்கு வீசிய மிகக் கடுமையான புயலில் சரிந்து விழுந்தது. டிசம்பர் 15 , நேற்று பிற்பகல் பிரேசிலில் உள்ள குவைபா நகரில் 90 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி ஒன்று , அந்நகரத்தையே புரட்டி போட்டது. இந்த புயலினால் உள்ளூரில் ஏராளமான பாதிப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. புயல் உச்சத்தில் இருந்தபோது, பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த கடுமையான புயலில் 114 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான சுதந்திர தேவியின் சிலை காற்றினை சமாளிக்க முடியாமல் பெயர்ந்து விழுந்தது.
பிரேசில் முழுவதும் ஹவான் என்ற சங்கிலித் தொடர் பல்பொருள் அங்காடி ஏராளமாக உள்ளது. ஒவ்வொரு ஹவான் சூப்பர் மார்க்கெட்களின் வாசலிலும் சுதந்திரதேவியின் பிரம்மாண்டமான சிலை ஒன்று கட்டாயமாக இடம்பெறுகிறது. இதனால் பிரேசில் முழுக்க ஏராளமான பிரதி சுதந்திர தேவியின் சிலைகள் உள்ளன.
ஹவான் நிர்வாகத்தின் அறிக்கைப்படி, கடுமையாக சூறாவளிக் காற்றில் சுதந்திர தேவி சிலையின் 78 அடி உயர மேல் பகுதி மட்டுமே பெயர்ந்து விழுந்துள்ளது. ஆனாலும் 36 அடி பீடம் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் யாரும் இல்லை என்பதால் , யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை , சிலையின் சேதத்தை தவிர வேறு எந்த சேதமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த காட்சிகளைப் படம்பிடித்த சிலர் , அதை சமூக வலைதளங்களில் பரப்பினர். காற்றில் சுதந்திர தேவியின் சிலை தள்ளப்பட்டு தரையில் மோதி , துண்டு துண்டாக உடைவதை படம் பிடித்து இருந்தனர் , சிலையின் தலை துண்டு துண்டாக சிதறியுள்ளது.
இந்த சிலை 2020 ஆம் ஆண்டு ஹவான் மெகாஸ்டோர் திறக்கப்பட்ட போதே சிலையும் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை ஹவான் நிர்வாகத்தினர் முறையாக அரசு அனுமதியைப் பெற்றே நிறுவி உள்ளனர். சிலை இடிந்ததும் அந்த இடத்தினை சீல் வைத்து பொதுமக்கள் அணுகலுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. உடைந்த பாகங்கள் அனைத்தையும் , அந்நிறுவனம் அப்புறப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி குவைபாவின் மேயர் மார்செலோ மரனாட்டா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். சுதந்திர தேவி சிலை விழுந்ததில் பெரிய சேதமா , மக்கள் யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார். அந்த இடத்தில் விரைவான நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பாராட்டினார். பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது பற்றி கலந்து ஆலோசிப்பதாகவும் கூறினார். பிரேசிலில் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை விழுவது முதன்முறை அல்ல, இதற்கு முன்பும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.