
தெருநாய்கள் தொல்லை என்பது நாடு முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாக சமீபகாலமாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தெருநாய்கள் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக சாலை விபத்து உள்பட பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, நடைபாதை, சாலை, பூங்கா, கோவில், ரெயில் நிலையம் உள்பட நாய்கள் சுற்றித்திரியாத இடமே சென்னையில் இல்லை என்ற அளவிற்கு தற்போது மாறிவிட்டது. நாய்களுக்கு திடீரென வெறிபிடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் துரத்தி துரத்தி கடிக்கிறது.
இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடங்களைச் சுற்றி தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும்போது, அப்பகுதிகளில் வருபவர்களைக் கடித்து குதறும் சம்பவங்கள் நடக்கின்றன, மேலும் இது பொதுமக்களின் அச்சத்தை அதிகரிக்கிறது. இதனாலேயே நாய்கள் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை தனியாக சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.
அந்தவகையில், சென்னையில் முக்கிய பகுதியான மெரினா, திருவான்மியூர், பட்டினம்பாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் சமீபகாலமாக நாய்களின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு பல மடங்கு அதிகமாக உள்ளது.
காலை நேரங்களில் நடைபயணம் செல்வோரையும், கடற்கரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களையும், குடும்பமாக சென்று பொழுதைக் கழிப்போர் என யாரையும் விட்டுவைக்காமல் நாய்கள் கடிக்க துரத்துகிறது.
கடற்கரை பகுதிகளில் நாய்கள் கூட்டமாக வருவது, நாய்கள் சண்டையிடுவது, வாக்கிங் செல்பவர்களை துரத்தி கடிப்பது போன்ற செயல்களால் மக்கள், குறிப்பாக குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் நிம்மதி இல்லாமல் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடற்கரைக்கு செல்லவே பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் கடற்கரையில் நிம்மதியாக அமர்ந்து குழந்தைகளுடன் பொழுதை கழிக்க முடியவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. இது போன்ற நாய்களால் ஏற்படும் ஆபத்துகளை கட்டுப்படுத்த, நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுதல், மேலும் நாய்களை கையாளும் சட்ட விதிகளை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் அவசியம் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், நாய்கள் கடற்கரைக்கு வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் செல்ல முடியும். கடற்கரையில் அச்சத்தை ஏற்படுத்தும் தெருநாய்களின் தொல்லைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ள நிலையில், தெருநாய்கள் பிரச்சனைக்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? எப்போது நடவடிக்கை எடுக்கும்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.