பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, இனி பள்ளி வளாகத்திற்குள் கம்மல், செயின், வளையல், கயிறு போன்ற எந்தவிதமான நகைகள் அல்லது ஆபரணங்களையும் அணிந்து வர அனுமதி இல்லை. இந்த உத்தரவு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.
கல்வித் துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பள்ளிகளில் நடைபெறும் தேவையற்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்கும், மாணவர்களிடையே ஒற்றுமையையும், எளிமையையும் ஊக்குவிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக, பள்ளி வளாகங்களுக்குள் நகைகள் அணிந்து வருவதால் ஏற்படும் கவனச்சிதறல்கள், திருட்டு சம்பவங்கள் மற்றும் போட்டி மனப்பான்மை அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைக் கருத்தில் கொண்டே புதுச்சேரி அரசு இந்த புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.
அதாவது புதுச்சேரி அரசின் உத்தரவின்படி, மாணவர்கள் அனைவரும் சீராக முடி வெட்டிருக்க வேண்டும், கைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கம்மல், ஜெயின், கயிறு, வளையல் போன்ற எந்தவொரு நகைகளும் அணிந்திருக்க கூடாது. அதேபோல், லேப்டாப் பள்ளிக்கு எடுத்துச் சென்றால், அதில் பாடங்களைத் தவிர, விளையாட்டு, விரும்பத்தகாத வீடியோக்கள் இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனே பறிமுதல் செய்யப்படும். கட்டாயம் செல்போனுக்கு அனுமதி கிடையாது.
இந்த உத்தரவு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விலையுயர்ந்த நகைகளை அணிந்து வரும் மாணவர்கள், அது திருடுபோகும் பட்சத்தில் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும், அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான எளிமையான தோற்றத்துடன் வருவது ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த உத்தரவு குறித்து சில பெற்றோர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். சிறிய குழந்தைகளுக்கு காதணிகள் போன்றவற்றை அணிவிப்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும், திடீர் தடை சற்று கடினமானது என்றும் அவர்கள் கருதுகின்றனர். அதேசமயம், பல பெற்றோர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். பள்ளி என்பது கல்வி கற்க வரும் இடம் என்றும், அங்கே நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு இடமில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
புதுச்சேரி அரசின் இந்த புதிய கட்டுப்பாடு, வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.