

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பயண பாதுகாப்புக்காகவும் பெண்கள் ஓட்டக்கூடிய பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. சென்னையில் இந்த ஆட்டோக்களை ஆண்கள் சிலர் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய எதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பிங்க் ஆட்டோ சேவை கடந்த 8 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
அந்த வகையில், சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிக்காகவும், பெண்களுக்குத் தனியாகத் தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் ரூ. 1 லட்சம் அரசு மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் பிங்க் ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று திட்ட விதிமுறைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த ஆட்டோக்களை சென்னையில் ஆண்கள் சிலர் பல இடங்களில் ஓட்டி வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக நலத்துறை கள ஆய்வு குழு ஆய்வு நடத்திய நிலையில் சில ஆண்கள் இந்த ஆட்டோக்களை ஓட்டுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது புகார் பெறப்பட்டுள்ளது.
‘தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, மானிய உதவியுடன் வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும். விதிகள் பலமுறை எடுத்துரைக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து ஆண்கள் இந்த ஆட்டோக்களை இயக்குவது கண்டறியப்பட்டால், அந்த ஆட்டோக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.