தமிழகத்தில் படித்து வரும் வட மாநில மாணவர்கள் அரசு பள்ளியில் சேரும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசு மாணவர்களின் படிப்பு மற்றும் பிற திறமைகளையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களையும், ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அரசு பள்ளிகளையும், அரசு பள்ளி மாணவர்களையும் மேம்படுத்த தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறது.
இதன் விளைவாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அந்தவகையில் தற்போது ஒரு அறிக்கையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் ஏராளமானோர் பணி காரணமாக குடியேறுகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகள் இங்கேயே பள்ளிகளில் படித்தும், குறிப்பாக தமிழ் படித்தும் வருகின்றனர்.
சில வட மாநிலத்தவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தாலும், பலர் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். எனவே, கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளிக்கப்படும் என அவர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல், வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் தமிழக மாணவர்கள் மட்டுமின்றி வட மாநில மாணவர்களின் படிப்பும் மேம்படும். அதேபோல், மாநிலம் விட்டு மாநிலம் வந்து படிப்பதால் ஏற்படும் சோர்வு நீங்கி, ஆர்வத்துடன் படிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்களின் கல்வி திறனையும், மற்ற திறமையையும் வளர்க்கும் விதமாக தமிழக கல்வித்துறை தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வருகிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் தெரிவதாகவும் கருத்துக்கள் எழுகின்றன.