
ஆக்சியம் - 4 திட்டத்தின் கீழ், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த 25-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரரரான சுபான்ஷு சுக்லா. அவருடன் அமெரிக்கா, போலந்து, அங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 வீரர்களும் சென்றுள்ளனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இந்தியர் என்ற பெருமையை பெற்றதுடன், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் சுபான்ஷு சுக்லா படைத்தார்.
அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை எடுத்து சென்றுள்ளார்.
அந்த வகையில் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து எடுத்து சென்ற பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை விண்வெளி நிலையத்தில் முளைக்க வைத்து தினமும் அந்த செடிகளில் வளர்ச்சியை ஆய்வு செய்து வருகிறார். அவர் பூமிக்கு திரும்பும்போது அந்த செடிகளையும் தன்னுடன் கொண்டு வரும் சுபான்ஷு அந்த செடிகள் கர்நாடக மாநிலம் தார்வாட் கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்பட்டு ஆய்வு அவற்றின் வளர்ச்சி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் அங்கிருந்து 13-ந்தேதி புறப்பட்டு, புளோரிடா கடற்கரைக்கு வெளியே 14-ந்தேதி தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷு சுக்லா ஆய்வு செய்தார். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம்' என்றனர்.