

2026-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில்(SIR) அரசியல் கட்சியினரும் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடு வீடாக படிவங்கள் கொடுக்கப்பட்டு அதில் வாக்காளர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதியுடன் இந்தப்பணியை நிறைவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ள நிலையில், இன்னும் 9 நாட்களே உள்ளதால் பணிகள் முழுவீச்சில் வேகமாக நடைபெற்று வருகிறது.வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 83,000 பணியாளர்கள், 33,000 தன்னார்வலர்கள், 2,45,340 அரசியல் கட்சிகளின் ‘பூத் லெவல்’ ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 27-ந் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6.46 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 96.22 சதவீதம், அதாவது 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் கொடுக்கப்பட்டு விட்டது.
பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ‘பூத் லெவல்’அலுவலர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் மற்றொரு படிவத்தை கையெழுத்து போட்டுகொடுக்கிறார்கள்.
இதுதான் ரசீது. ஆனால் நம்மிடம் இருந்து பெறும் படிவங்களை பதிவேற்றம் செய்துவிட்டார்களா என்பதை அறிந்துகொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களது செல்போன் எண்ணை கொடுத்து, அதில் வரும் ரகசிய குறியீட்டு மூலம் ‘லாகின்’ செய்ய வேண்டும்.
பின்னர் Fill Enumeration என்ற பகுதியை ‘கிளிக்’ செய்தால், அதில் வரும் மாநிலங்களில் தமிழகத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், உங்களது கணக்கீட்டு படிவம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு இருந்தால் உங்களது படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது என்ற தகவல் வரும். ஒருவேளை, உங்களது படிவம் ஆன்லைனில் ஏற்றப்படாவிட்டால் அதனை பதிவேற்றம் செய்யும்படி கேட்கும்.
அதேசமயம், வாக்காளர்கள், கணக்கெடுப்பு படிவங்களில் கொடுத்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் போது அவர் கொடுத்த தகவல்கள் சரியானதா? என்பதை ‘பூத் லெவல்’ அதிகாரியே சரிபார்த்து விடுவார். ஒருவேளை அதில் பிரச்சினை இருந்தால், தேர்தல் அதிகாரி அதனை ஆய்வு செய்வார்.
இருந்தாலும் ஒரு வாக்காளர் கையெழுத்து போட்டு கணக்கெடுப்பு படிவத்தை கொடுத்து விட்டால், அவரது பெயர் 9-ந் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்ந்துவிடும். ஒருவேளை வாக்காளர்கள் கொடுத்த கணக்கெடுப்பு படிவத்தில் தவறுகள், ஆட்சேபனைகள் இருந்தால் தேர்தல் அலுவலர்கள் ஆவணங்கள் கேட்டு சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு நோட்டீஸ் கொடுப்பார். ஆனால் இந்த பணி டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெறும்.
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட 50 சதவீத படிவங்கள், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.