இந்திய ஐ.டி. துறையில் மிக முக்கிய முன்னணி நிறுவனமாக இருக்கும் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தற்போது ராஜ்ய சபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சுதா மூர்த்தி?: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியாகவும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாராகவும் பலரால் அறியப்படுபவர்.
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம் ஷிகோன் பகுதியில் 1950ம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய கேரியரை ஒரு கணினி விஞ்ஞானி மற்றும் பொறியாளராக தொடங்கிய இவர். ‘டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமெட்டிவ் (டெல்கோ) நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையைக் கொண்டவர்.
இவர் ஒரு எழுத்தாளராக ஆங்கிலம், கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் சுமார் 42 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். குழந்தைகளுக்காகவும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். மிகச்சிறந்த கதை சொல்லி மற்றும் மேடைப் பேச்சாளர். அதோடு இவர் ஒரு கல்வியாளரும் கூட. இவரது தெளிவான சிந்தனை, நுணுக்கமான பேச்சின் மற்றும் கருத்துகளின் மூலமாக சமூக வலைதளங்களில் பல இளைய தலைமுறையினரையும் வழிநடத்தி வருகிறார்.
சமூகப்பணி: இவர் மிகச்சிறந்த வள்ளல் குணம் கொண்டவர் என்பதற்கு சான்றாக வறுமையில் தவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் ஏராளமான பள்ளிகளுக்கு கணிப்பொறி மையங்கள் மற்றும் நூலகங்களை அமைத்துக் கொடுத்துள்ளார். அதோடு, ஆதரவற்றோர்க்கான இல்லங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும், 1996ம் ஆண்டு ‘இன்போசிஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை துவங்கிய சுதா மூர்த்தி அதன் மூலம் பல ஆண்டுகளாக சமூகம் சார்ந்த தொண்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
விருதுகள்: சுதா மூர்த்தியின் இந்த சமூகப் பணியை பாராட்டும் விதமாக 2006ம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான. ‘பத்ம ஸ்ரீ’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக. 2023ம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான. ‘பத்ம பூஷன்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் எக்ஸ் தள வாழ்த்துப் பதிவு: ராஜ்ய சபாவின் நியமன எம்.பி. பதவிக்கு தற்போது சுதா மூர்த்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் “ராஜ்ய சபாவின் எம்.பி. பதவிக்கு சுதா மூர்த்தியை பரிந்துரை செய்த ஜனாதிபதிக்கு நன்றி. சுதா மூர்த்தி சமூகப் பணி, சேவை, கல்வி என பல துறைகளில் இருப்பவர்களுக்கு ஊக்கமாகவும் உத்வேகமாகவும் இருந்து வருகிறார். ராஜ்ய சபாவில் அவர் இருப்பது கண்டிப்பாக பெண் சக்திக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும். நமது நாட்டின் விதியை மாற்றுவதில் பெண்களின் பலமும் ஆற்றலும் வெளிக்காட்டப்படும். பாராளுமன்றத்தில் அவரது பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.