
இந்தியாவில் பெண் குழந்தைகளை சுமையாக கருதும் நிலை மாறவேண்டும் என்பதற்காகவும், பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) என்கிற செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளை செலவாக நினைத்த காலம் மாறி, பெண் குழந்தைகளை அனைவரும் வரவேற்பதுடன் அரசும் பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் பெண்களை படிக்க வைக்கவும், திருமணம் செய்து கொடுக்கவும் கஷ்டப்படும் பெற்றோரின் கவலையை போக்க கொண்டுவரப்பட்டது தான் இத்திட்டம். சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட உங்கள் மகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்ற மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டமாகும்.
கிடைக்கும் பலன்கள் :
* பெற்றோர் தங்களது பெண் குழந்தையின் பெயரில் கணக்கை தொடங்கி மாதந்தோறும் ரூ.1000 செலுத்தி வரவேண்டும். இவ்வாறு 15 ஆண்டுகள் செலுத்தி வந்தால் நீங்களே எதிர்பார்க்காத வகையில் 21 ஆண்டுகள் முடிவில் பெரிய தொகையை பெறலாம்.
* இந்த திட்டத்தில் உங்கள் மகள் பிறந்த உடன் அவளது பெயரில் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் மட்டுமே ரூ.1000 டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் பெண் குழந்தை வளர்ந்து 21 வயதாகும் போது உங்கள் வைப்பு தொகை முதிர்ச்சியடைந்து உங்கள் கைக்கு வந்து சேரும். எந்த வயதில் இருந்து கணக்கு தொடங்கப்படுகிறதோ அந்த ஆண்டில் இருந்து 15 ஆண்கள் வரை மட்டும் முதலீடு செய்யவேண்டும். இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டதிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும்.
* உதாரணமாக, நீங்கள் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு ரூ.12,000 (12 மாதங்கள் முடிவில் ) வீதம், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடாக ரூ.1,80,000 மற்றும் அதற்கு வட்டியாகப் பெறப்பட்ட தொகை ரூ.3,74,206 ஆகும். ஆக மொத்தம் உங்கள் பெண் குழந்தையின் 21-வது வயதில் நீங்கள் பெறக்கூடிய மொத்தத் தொகை ரூ.5,54,206 ஆகும்.
* அதேபோல் உங்களது மகளுக்கு 18 வயதாகும் போது, கல்வி அல்லது திருமணம் போன்ற காரணங்களுக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் முறையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் மொத்த வைப்புத் தொகையில் 50 சதவீதம் வரை நீங்கள் எடுக்க முடியும்.
* இது EEE பிரிவில் உள்ளது. அதாவது முதலீடு செய்யப்பட்ட தொகை, வட்டி ஈட்டப்பட்டது, முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* இந்த திட்டத்திற்கு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டின்படி ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது.
திட்டத்தில் சேருவது எப்படி?
* உங்கள் வீட்டின் அருகிலுள்ள தபால் நிலையத்திலோ அல்லது ஆர்பிஐயால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ நீங்கள் ரூ.250 மட்டும் செலுத்தி இந்த திட்டத்திற்கான கணக்கை திறக்கலாம்.
* ஒரு பெண் குழந்தைகளுக்கு ஒன்று வீதம் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மூன்றாவதாக உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் உங்களால் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க முடியாது.
* செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு முழுமையாக உங்களது பெண் குழந்தைகளின் பெயரிலும், நாமினியாக பெற்றோரும் சேர்க்கப்படுவார்கள்.
* இந்த திட்டத்தில் சேருவதற்கு உங்கள் மகளின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை சமர்பிக்க வேண்டியது கட்டாயம். ஆதார் கார்டு, பான் கார்டு இதுவரை விண்ணப்பிக்கவில்லையெனில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்போர் ஆதார் கார்டு, பான் கார்டு சமர்ப்பிக்கப்படும் வரை கணக்கு செயல்படாது.
* உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை இந்த திட்டத்தின் சேர முடியும்.
* இந்த திட்டத்தில் ஏழை, பணக்காரர், வருமானம் குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி பெண் குழந்தை வைத்துள்ள யார் வேண்டுமானதும் இந்த திட்டதில் சேர்ந்து பலன் பெறலாம். இது குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற திட்டமாகும்.
* இந்த திட்டத்தில் கணக்கு உள்ள பெண் குழந்தைக்கு 18 வயதாகும் வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே தொடர முடியும். பெண் குழந்தைக்கு 18 வயது அடைந்தபிறகு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து கணக்கு வைத்திருக்கும் அந்த பெண் குழந்தையே கணக்கை நிர்வகிக்கலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் தொடர்பாக உங்களுக்கு தேவையான முழு விவரங்களையும் https://www.nsiindia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.