கோடைக்கால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் இந்தியாவின் பல வழித்தடங்களில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது திருச்சி – மதுரை வழியில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், டெல்லி முதல் வாரணாசி இடையில் துவக்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு, தற்போது இந்தியா முழுவதும் மொத்தம் 82 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் இலக்கு 4,500 வந்தே பாரத் ரயில்களைக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். நாடு சுதந்திரம் அடைந்து நூற்றாண்டைத் தொடும்போது இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு.
இந்தத் திட்டத்துடன் தமிழகத்திற்கும் பல்வேறு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, கோவை – பெங்களூரு கண்டொன்மென்ட் ஆகிய ரயில்கள் தெற்கு ரயில்வேயின் கீழும், மைசூரு – சென்னை சென்ட்ரல் ரயில் தென்மேற்கு ரயில்வேயின் கீழும் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில், கடந்த நிதியாண்டில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திட்டங்கள் குறித்து அவ்வப்போது பல்வேறு விவரங்களை ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். கடந்த ஆண்டில் வந்தே பாரத் ரயில்கள் பயணித்த அளவு என்பது பூமியை 310 முறை சுற்றியதற்கு சமமாகும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றன.
தற்போது மொத்தம் 82 வந்தே பாரத் ரயில்கள் 100 வழித்தடங்களில் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழியே 284 மாவட்டங்களை கடந்து செல்கிறது. வந்தே பாரத் ரயில்கள் அதிகவேகம், டெக்னாலஜி ஆகியவற்றுடன் விமானத்தைப் போன்ற பயண அனுபவத்தைத் தருவதாக பயணிகள் கூறுகின்றனர்.
2019ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 2 கோடி பேர் வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ரிப்போர்ட் கூறுகிறது. அடுத்தக்கட்டமாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
இந்தநிலையில்தான் கோடைக்கால சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வழியாகத் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் வரும் ஏப்ரல் 19, 20, 21, 26, 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன. இதன் கட்டணம் 1,605 ரூபாயாகும். இப்போது 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. இதன் கட்டணம் 3,245 ரூபாயாகும்.