தமிழ் திரை ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி. தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான ஆன ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை சுந்தர். சி இயக்கவிருந்தார். இது பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பானது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த அந்த திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக நடிகர் கமலஹாசன் தயாரிக்க இருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை நடிகர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார்.
ரஜினி மற்றும் கமல் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கும் திரைப்படமாக இருந்ததால் , இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து வேறு எந்த நடிகர் நடிகைகள் நடிப்பார்கள்? என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டும் இருந்தது. இந்த படத்தை நகைச்சுவை திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி இயக்குவதால் படம் ஜனரஞ்சகமாக இருக்கும் என்று ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியேறுவதாக சுந்தர் சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அதிர்ச்சிகரமான அறிக்கையில் என்ன எழுதி இருந்தது என்பதையும் இங்கு பார்ப்போம். இந்த அறிக்கை சுந்தர்.சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின் மேலே தனது அன்பான ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஒரு மனமார்ந்த வணக்கங்கள் , என்று ஆரம்பிக்கிறது.
அதில் இயக்குனர் சுந்தர்.சி , கனத்த இதயத்துடன் உங்களுடன் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக,மிகவும் பெரிய மதிப்புள்ள திட்டமான 'தலைவர்173' திரைப்படத்திலிருந்து விலகுவது என்ற கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.திரையுலக லெஜெண்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களும், புகழ்பெற்ற உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்பட முயற்சி , எனது ஒரு கனவு நனவான தருணம்.
நம் வாழ்க்கையில், நமது கனவுகளில் இருந்து சில நேரம் நாம் விலகிச் சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன. இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுடனான
எனது தொடர்பு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. நான் எப்போதும் அவர்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த சில நாட்களாக நாங்கள் பகிர்ந்து கொண்ட தருணங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பானது, அவை எப்போதும் போற்றப்படும். அவர்கள் எனக்கு விலை மதிப்பற்ற பாடங்களை கற்றுக் கொடுத்தார்கள்.நான் முன்னேறும் போதெல்லாம் அவர்கள் கொடுத்த அறிவையும் ஊக்கத்தையும் தொடர்ந்து நினைவு கொள்வேன்.
இந்த பெரிய வாய்ப்பிலிருந்து நான் விலகினாலும், அவர்களின் மதிப்புமிக்க வழிகாட்டுதலைத் தொடர்ந்து நாடுவேன்.இந்த ஒரு பெரிய வாய்ப்பை என்னை நினைவில் கொண்டு , அவர்கள் இருவரும் வழங்கியதற்காக , என் இதயத்தின் அடியிலிருந்து அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கடினமான செய்தியை ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றி இருந்தால் , உங்கள் அனைவரிடமும் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். மேலும் உங்களது மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் வகையில் நான் இந்த தளத்தில் செயல்படுவேன் என்பதை உறுதி அளிக்கிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி. இது எனது உலகம். இதில் உங்கள் அனைவருடனும் மேலும் பல நல்ல நினைவுகளை உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி!
அன்புடன்,
சுந்தர் சி.
என்று அந்த அறிக்கை முடிகிறது. திடீரென்று வெளியாகிய இந்த அறிக்கை தமிழக ரசிகர்களிடம் பரபரப்பை கிளப்பி உள்ளது.