இனி எல்லாமே மாறப்போகுது..! ஆந்திராவில் பிரம்மாண்ட AI மையத்தை அமைக்கும் கூகுள்..!
ஆந்திராவின் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் (AI Hub) 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது. இச்செய்தியை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளர்ச்சி என குறிப்பிட்டுள்ளார்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை கூகுள் நிறுவனம் அமைக்கிறது. டில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.இவ்வகையில் ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில்15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில், "கூகுள் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் முதல் ஏஐ மையத்தை அமைக்கவுள்ளது. இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் பேசினேன்.
ஜிகாவாட் அளவிலான கம்ப்யூட்டர் திறன், புதிய சர்வதேச கடலுக்கடி இணைய இணைப்பு மற்றும் பெரிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மையம் ஒருங்கிணைக்கிறது.. இதன் மூலம் இந்தியாவின் தொழில் நிறுவனங்களுக்கும் பயனர்களுக்கும் கூகுளின் அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்டு செல்லப்படும். இது ஏஐ கண்டுபிடிப்புகளைத் துரிதப்படுத்தி, நாடு முழுவதும் வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்தில் கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் அமைய இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
இம்மையம் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை எடுத்துரைப்பதாகவும், நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தி, உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்க உதவியாக இருக்கும் என்று இந்தியப் பிரதமர் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தனது தொழில் நுட்ப அறிவு, நிர்வாகத்திறன் அனைத்தையும் நம்நாட்டு முன்னேற்றத்துக்கு அர்பணிப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இது மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனையான தருணம் என்று கூறி, இந்த வளர்ச்சிக்கு ஆதரவு அளித்த பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.