
உடல் எடையைக் குறைக்க பல விதமான யோசனைகளிலும், பல புதிய பயிற்சி முறைகளையும் நாம் மேற்கொள்கிறோம். அதில் சில நடைமுறைகள் அதிக பலன் கொடுக்கிறது. உணவுமுறை மாற்றம் உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.சமீப காலத்தில் சர்க்கரை இல்லாத உணவுமுறை பிரபலமடைந்து வருகிறது. சர்க்கரை இல்லாத உணவின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளும், அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
கொழுப்பாக மாறும் சர்க்கரை:
உணவில் உள்ள சர்க்கரை அதிகப்படியாக உடலில் சேர்ந்து தேக்கம் அடையும் போது , அது கொழுப்பாக மாறுகிறது. இனிப்பு பொருட்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்.அதனால் , சர்க்கரையை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீரழிவு நோய் மற்றும் கொழுப்பு சார்ந்த இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது போன்ற காரணங்களால் சர்க்கரையை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற கருத்து சரியானது தான்.ஆனால் , நாம் அதை சரியாகக் கடைப்பிடிக்கிறோமா? என்பதில் தான் பலன் இருக்கிறது.
சர்க்கரையின் வகைகள் :
உணவு முறையில் இரண்டு சர்க்கரை வகைகள் உள்ளன , ஒன்று நேரடி சர்க்கரை , மற்றொன்று மறைமுக சர்க்கரை. நேரடி சர்க்கரை என்பது நமக்கு அளவு தெரிந்து உணவுப் பொருட்களில் சேர்க்கும் சர்க்கரை. பால் , காபி , டீ , பழச்சாறுகள் , கேசரி , சர்க்கரைப் பொங்கல் , மைசூர் பா , ஜாங்கிரி போன்ற இந்திய பாரம்பரிய இனிப்பு வகைகளில் சர்க்கரை சேர்க்கப்பட்ட அளவுகளை நாம் அறிந்திருப்போம். இதனால் நேரடி சர்க்கரை உணவுப்பொருளை டயட் காலங்களில் கலோரி அளவை குறைக்க தவிர்ப்போம்.
மறைமுக சர்க்கரை என்பது , அந்தப் பொருட்களில் கலக்கப்பட்ட சர்க்கரையின் அளவு நமக்கு தெரியாது , அதே நேரத்தில் அதில் சர்க்கரை இருக்காது என்று நாம் நினைத்து இருப்போம். பிஸ்கட், பிரட், கேக் , ஐஸ்கிரீம் ஆகியவற்றில் மறைமுக சர்க்கரை உள்ளது, இது மட்டுமல்லாது சுத்திகரிக்கப்பட்ட உணவு தானியங்களில் கூட மறைமுகமாக சர்க்கரை உள்ளது. இதை நாம் அறியாததால் டயட்டில் இவற்றிற்கு விலக்கு அளித்து விடுகிறோம்.
தவறான இனிப்பில்லா உணவுமுறை:
பலரும் நோ சுகர் டயட் என்ற பெயரில் பால் , டீ, காபியில் சர்க்கரை சேர்க்காமல் பழக்கப்படுத்தி கொண்டால் , உடல் எடை குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 4 டீ அல்லது காபி குடிக்கிறோம் , அதில் உள்ள சர்க்கரையின் அளவு 4 ஸ்பூன்கள் என்ற அளவில் தான் இருக்கும். இதை மட்டும் தவிர்ப்பதால் உங்கள் உடலில் எந்த மாற்றமும் நிகழாது.
ஒரு மாதம் முழுக்க நேரடி சர்க்கரையை தவிர்த்து விட்டு , இனிப்பு குறைந்த பரோட்டா , பிரட் , பிஸ்கட் சாப்பிடுவதால் எந்த பயனும் இருக்காது. 4 டீயில் இருப்பதை விட பிரட்டில் இனிப்பு அதிகம் இருக்கும். சிலர் இனிப்பு வகைகள் , பிரட் , கேக் எல்லாம் தவிர்த்து விட்டு இனிப்பு இல்லாத பீட்ஸா, பர்கர், பரோட்டா நிறைய சாப்பிடலாம் என்று சாப்பிடுகிறார்கள் இதுவும் தவறான முறை தான்.
சரியான இனிப்பில்லாத உணவு முறை:
பால் சார்ந்த பானங்களில் இனிப்பை தவிர்ப்பது ஒரு ஆரம்பம் தானே தவிர முழு தீர்வு அல்ல. நேரடி மற்றும் மறைமுக இனிப்பு கொண்ட அனைத்து உணவுப் பண்டங்களையும் தவிர்த்தால் தான் ஆரோக்கியத்தின் முழுப் பலனை நீங்கள் அடைய முடியும். மைதா சார்ந்த மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை குறைவாக உட்கொள்வதும் அவசியம்.
சுகர் பிரீ என்று இனிப்புகளை சாப்பிட்டால் அதில் சர்க்கரை குறையாது , இனிப்பின் மூல சேர்க்கையான பால் மற்றும் மைதா உள்ளிட்ட பொருட்களில் மறைமுக சர்க்கரை உண்டு. இது போன்ற விஷயங்களை அறிந்து முழுமையாக சர்க்கரையை உணவில் இருந்து நீக்கினால் , விரைவில் உடல் எடை குறைந்து , ஆரோக்கியம் மேம்படைவது சாத்தியமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)