
இந்த மூன்று விஷயங்கள் உலக மக்களை பரபரப்பாக வைத்திருந்தது. அவை ரஷ்யா - உக்ரைன் மோதல் , இஸ்ரேல் - காசா மோதல் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புதல். உலகமே சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு வருவார் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. முதலில் சில நாட்கள் மட்டுமே விண்வெளியில் தங்க சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்கள் விண்வெளியில் தங்க நேர்ந்தது.
கடந்த ஆண்டு ஜூன் 2024 இல் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சுனிதா மற்றும் வில்மோர் விண்வெளியை அடைந்தனர். அதன் பின்னர் அவர்கள் பூமி திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் நாசாவின் விண்வெளிப் பயணம் பற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருந்தன. பின்னர் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் கிராஃப்ட் விண்கலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நான்கு விண்வெளி வீரர்களுடன் புறப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
மார்ச் 19 ஆம் தேதி அன்று சுனிதாவும் வில்மோரும் பூமி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை காரணமாக சில நேரம் இது தாமதமாகும் வாய்ப்பும் உள்ளது. விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய பின்னர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சில கடினமான சூழல்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனாலும் அவை அவர்களுக்கு ஏற்கனவே பழகிய ஒன்று தான் என்பதால் அவர்கள் தைரியமாக சமாளித்து அவற்றில் இருந்து மீண்டு வருவார்கள் என்று நம்பலாம்.
விண்வெளிப் பயணம் என்பது ஒரு அசாதாரண அனுபவம், அதற்காக முன்கூட்டியே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விண்வெளியில் சில நாட்களுக்கு மேல் தங்கி இருந்ததால் அவர்களின் உடல் ஈர்ப்பு விசை இன்றி பழகி இருக்கும். எப்போதும் விண்வெளியில் மிதந்த வண்ணம் இருப்பதால் அவர்களின் உடல் எடையை , அவர்களால் உணர முடியாது. ஒரு காகிதம் போலத் தான் தங்களின் உடலினை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். பூமிக்குத் திரும்பிய உடனேயே அவர்களால் நிற்க கூட முடியாது.
நீண்ட மாதங்களுக்கு பிறகு ஈர்ப்பு விசையை உணர்வதால் அவர்கள் உடல் மலையளவு கனப்பதை போல உணர்வார்கள். தங்களின் எடை தாங்காமல் கிழே விழுவார்கள். கை, கால்கள் அசைப்பது கூட பெரும் எடையை தூக்கி இறக்குவது போல இருக்கும். மெத்தையில் படுத்தால் கூட பாதாளத்தில் விழுவது போல இருக்கும். யாரோ ஒருவர் அழுத்துவதை போல உணர்வார்கள். அவர்கள் இயல்பாக நிற்க நடக்க, மற்ற வேலைகள் செய்ய சில மாதங்கள் வரை ஆகலாம். இது எல்லாம் புவி ஈர்ப்பு விசையின் தாக்கங்கள்.
அவர்களின் இரத்தம் ஓட்டம் சமநிலை பூமியில் இயல்புநிலைக்கு மாறும் போது படபடப்பு, தலைச்சுற்றல் , மயக்கம் ஏற்படலாம். இதயம் முன்பை விட வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். விண்வெளியில் எடை இல்லாத மிகக் குறைந்த அளவில் சிறப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு , பூமியின் சாதாரண எடை கொண்ட உணவுகளை சாப்பிடுவது கடினமாக இருக்கும். வயிற்றுக்குள் வேகமாக உணவு செல்வதை போல இருக்கும். மேலும் உப்பு , புளிப்பு , காரம் , இனிப்பு ஆகியவை சில காலம் ஒவ்வாமையில் இருக்கலாம்.
கண்களுக்கு பின்னால் அழுத்தம் ஏற்பட்டு, பார்வை மங்கலாகும். அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும். மக்கள் கூட்டம், இரைச்சல் எல்லாம் மிக அதிகமாக இருப்பதை போன்று தோன்றும். ஒரு சில மாதங்கள் சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பின்னரே அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.