சூப்பர் 'எல் நினோ' எச்சரிக்கை: இந்தியாவில் கடுமையான வறட்சி, உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கவலை.
எல் நினோ
எல் நினோAI image
Updated on

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள தீவிர 'எல் நினோ' (El Nino) காலநிலை பாதிப்பு மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு வரை மழையின் அளவு வெகுவாக குறைவதால் இந்தியாவில் கடுமையான வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பகுதியில் கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வெப்பமடைதலைக் குறிக்கும் ஒரு உலகளாவிய வானிலை நிகழ்வு .

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) இந்த வருடம் ஜூன் 11 அன்று மாலை, எல் நினோ தெற்கு அலைவின் (ENSO) வெப்பமான கட்டமான எல் நினோ, தற்போது வெப்பமண்டல பசிபிக் பகுதியில் தொடங்கியுள்ளது என்று அறிவித்தது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிதமான அல்லது வலுவான நிலைக்குத் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன், விஞ்ஞானிகள் ஒரு 'சூப்பர்' எல் நினோ உருவாகும் என்றும் முன்னறிவித்துள்ளனர்.

(NOAA)கணிப்பின்படி கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்வதற்கு 63% வாய்ப்புகள் உள்ளன என்றும் இதன் காரணமாக இந்த எல் நினோ மிகவும் வலுவான வெப்பநிலைகளை ஏற்படுத்த கூடும் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற மிக வலுவான எல் நினோ நிகழ்வு ஆறுமுறை மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எல் நினோ-தெற்கு அலைவு (El Niño–Southern Oscillation) என்பது வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வளிமண்டல காற்று அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு உலகளாவிய காலநிலை நிகழ்வு ஆகும். இந்தச் சுழற்சி மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • எல் நினோ (வெப்பமான காலம்) -மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வலுவிழந்த காற்று

  • லா நினா (குளிர் நிலை)- சராசரிக்கும் குறைவான கடல் வெப்பநிலை மற்றும் வலுப்பெற்ற காற்று.

  • ENSO எனப்படும் நடுநிலை- ஏறக்குறைய இயல்பான கடல் வெப்பநிலை மற்றும் காற்றின் நிலைமைகள்.

Super El Nino
Heat Waves

இந்த மாற்றங்கள் ஒன்றிணைந்து, உலகளாவிய வானிலை முறைகள், பரவலான மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது அது உலகளாவிய வானிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய விஞ்ஞானிகளின் எச்சரிக்கையே உலக மக்களை கவலைப்பட வைத்துள்ளது.

எல் நினோ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி விட்டதாகவும் இது ஒரு 'சூப்பர்' நிகழ்வாக மாறக்கூடும் என தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான நோவா (NOAA) எச்சரித்துள்ளததைத் தொடர்ந்து இந்தியாவில் இயல்பை விடக் குறைவான பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் (IMD) கணித்துள்ளது.

இந்திய வானிலை மையம் (IMD) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO), எல் நினோ தாக்கத்தால் இந்தியாவில் பருவமழை வழக்கத்தை விட 8% முதல் 10% வரை குறைவாகவே இருக்கும் இந்தியாவில் மழைப்பற்றாக்குறை , வறட்சியை கணித்துள்ளதால் அதன் தாக்கத்தால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் மராத்வாடா, வட கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட சுமார் 150 முதல் 200 மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் தெலங்கானாவின் சில பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில கடலோரப் பகுதிகளைத் தவிர, ஏறக்குறைய நாடு முழுவதும் ஓரளவிற்குப் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த மதிப்பீடுகள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அதனைத் தொடர்ந்து, காரிஃப் பருவம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக, குறிப்பாக எல் நினோ ஆண்டிற்காகத் திட்டமிடும் அவசரகாலத் திட்டங்களைத் திருத்தியமைக்குமாறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் துறைகளை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகவுமா திருத்தப்பட்ட திட்டங்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவில் உள்ள 150 முதல் 200 வரையிலான நலிவடைந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமைக் கண்காணிப்பை வழங்கி தனது வேளாண் மாவட்ட அவசரகாலத் திட்டங்களை முழுமையாக மாற்றியமைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. .

"மாநிலங்களிடம் ஏற்கனவே மாவட்ட அளவிலான திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை குறைந்தது 10 ஆண்டுகள் பழமையானவை. இந்த ஆண்டு நிலைமை வேறுபட்டது, மேலும் இந்த ஆண்டின் எல் நினோ சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாநிலங்கள் தங்கள் திட்டங்களைத் திருத்தியமைக்க வேண்டும்," என்று ஒரு அரசு அதிகாரி தனியார் ஆங்கில இதழிடம் தெரிவித்துள்ளது கவனிக்கத் தக்கது.

எல் நினோ பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டு வரை மழையின் அளவு வெகுவாக குறைவதால் இந்தியாவில் கடுமையான வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கையை கவனத்தில் வைத்து உணவுகளை வீணாக்காமல் சேமித்து உணவுப் பற்றாக்குறை நீங்க செயல் பட வேண்டியது நமது கடமை.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 12 படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்: முழு விபரம்!
எல் நினோ
logo
Kalki Online
kalkionline.com