

1961-ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டத்தின்படி, பிறந்து 3 மாதத்திற்குள் இருக்கும் குழந்தையை தத்தெடுக்கும் பெண்களுக்கு மட்டும் 12 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. ஒரு குழந்தைக்கு 3 மாதங்களுக்கு மேல் வயது இருந்தால், தத்தெடுக்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை எதுவும் அளிக்கப்பட மாட்டாது. இந்த சட்ட விதிமுறைகள் குழந்தைகளை தத்தெடுக்கும் பெண்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால், நடைமுறை சிக்கல்கள் காரணமாக பிறந்து 3 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.
இந்த பாரபட்சமான விதிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
பெண்கள் தரப்பு முன் வைத்த வாதங்கள்:
i.ஒரு குழந்தையை தத்தெடுக்கும் போது , அந்தக் குழந்தை , தாயுடன் பழகவும் பிணைப்பினை ஏற்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. புதிய சூழலுக்கு குழந்தைகள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டாயம் அந்த தாய் , குழந்தையுடன் குறிப்பிட்ட காலங்கள் நேரத்தினை செலவிட்டு பராமரிக்க வேண்டும்.
ii. ஏற்கனவே உள்ள சட்டம் , உயிரியல் ரீதியாக பெற்றெடுக்கும் தாய்க்கும் , தத்தெடுக்கும் தாய்க்கும் இடையே பாரபட்சத்தை காட்டுகிறது.விடுப்பு என்பது இரு வகை தாய்மார்களுக்கும் தேவையான ஒன்று தான். இந்த பாரபட்சம் அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ உரிமைக்கு எதிரானதாக இருக்கிறது.
iii.இந்தியாவின் சட்ட நடைமுறையின் படி ஒரு குழந்தையை தத்து எடுப்பது சாதாரண காரியம் அல்ல. இதற்கு உண்டான நடைமுறைகளை செயல்படுத்தவே சில மாத காலங்களுக்கு மேல் ஆகும். இதனால் 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுப்பது , பல நேரங்களில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் , பின்னர் வரலாற்று சிறப்புமிக்க அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது "தாய்மை என்பது உயிரியல் ரீதியானது மட்டுமல்ல, அது உணர்வு பூர்வமானது" என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மகப்பேறு விடுப்பு விதிகளில் இருந்த பாரபட்சமான நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்:
1. மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்து எடுத்தால் மட்டுமே விடுப்பு என்ற நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.
2. குழந்தைக்கு வயது எதுவாக இருந்தாலும் , தத்தெடுக்கும் தாய்க்கு 12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க உரிமை உள்ளது.
3. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, குழந்தையின் வளர்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. இதனால் , ஆண்களுக்கும் தந்தைவழி மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கும் நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மகப்பேறு விடுமுறையில் பாகுபாட்டை களையும் வகையில் , மனிதாபிமான அடிப்படையில் , உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.