இல்லத்தரசிகளுக்கு ரூ.30,000 மாத வருமானம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இல்லத்தரசிகளின் தியாகத்திற்கு
இல்லத்தரசிகளின் தியாகத்திற்கு
Updated on

பெரும்பாலும் ஆண்கள் தங்களுடன் இருக்கும் மனைவி, சகோதரிகளைப் பார்த்து சும்மாதானே இருக்கிறாள் - என்று சொல்வதுண்டு.இந்தியக் குடும்பங்களில் சாதாரணமாகக் கடந்து போகும் ஒற்றை வாக்கியம் இது.

ஆனால், இந்த ஒற்றை சொல்லுக்கு பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின் ஆயுள் கால உழைப்பையும், தியாகத்தையும் நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் (Supreme Court) தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் அண்மையில் (ஜூன் 11, 2026) அங்கீகரித்திருக்கிறது.

விபத்து இழப்பீட்டு வழக்கொன்றில்,"ஒரு இல்லத்தரசி விபத்தில் மரணமடைந்தால், அவருடைய மாத வருமானத்தை குறைந்தபட்சம் ₹30,000 ஆக (ஆண்டிற்கு ₹3,60,000) கணக்கிட வேண்டும்" என்று நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இந்தத் தீர்ப்பு வெறும் பணத்தைப் பற்றியது அல்ல; அது அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அங்கீகாரமின்றித் தவிக்கும் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் உழைப்பிற்குச் சட்டம் வழங்கியிருக்கும் மகுடம்.

வழக்கமாக, வேலைக்குச் செல்லாத இல்லத்தரசிகள் விபத்தில் சிக்கினால், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாகவே இருக்கும். "அவர்கள் சம்பாதிப்பதில்லையே" என்ற வறட்டு வாதம் நீதிமன்றங்களில் முன்வைக்கப்படும். அதை முற்றிலும் உடைத்தெறிந்துள்ள உச்ச நீதிமன்றம், "குடும்பப் பராமரிப்பு இழப்பு" என்ற புதிய கோட்பாட்டை முன்மொழிந்துள்ளது.

Supreme Court
Supreme Court

ஒரு இல்லத்தரசி அதிகாலையில் எழுந்து சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, முதியவர்களைக் கவனிப்பது எனச் செய்யும் வேலைகளுக்கு நேரக் கட்டுப்பாடும் கிடையாது, வார விடுமுறையும் கிடையாது, மாதச் சம்பளமும் கிடையாது.

ஒரு ஆண் வெளியில் நிம்மதியாக சென்று சம்பாதித்து வர முடிகிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு பெண்ணின் 24 மணி நேர உழைப்பு இருக்கிறது. அவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் அல்ல; எதிர்காலச் சமூகத்தின் உன்னதமான மனித வளத்தை உருவாக்கும் "நாட்டின் கட்டுமானர்கள்" (Nation Builders) என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

குறைந்தபட்ச வருமானம்:

வேலைக்குச் செல்லாத பெண்களின் உழைப்பு மதிப்பிடப்பட்டு, மாதத்திற்கு ₹30,000 என்ற அடிப்படைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் கூடுதலாக இந்த ₹30,000 குடும்பப் பராமரிப்புத் தொகையும் சேர்த்து இழப்பீடாக வழங்கப்படும்.

இந்த ₹30,000 என்ற தொகை நிரந்தரமானதல்ல. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் 10% கூட்டு வட்டி விகிதத்தில் இது உயர்த்தப்பட வேண்டும்.

மாற வேண்டிய ஆண்களின் மனநிலை :

சட்டம் இன்று இல்லத்தரசிகளின் உழைப்பைப் பணத்தால் மதிப்பிட்டிருக்கலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர்களுக்குத் தேவைப்படுவது குடும்ப ஆண்களின் அன்பும், பரஸ்பர மரியாதையும், அங்கீகாரமும் மட்டுமே.

ஒரு அலுவலகத்திற்குச் செல்லும் ஆணுக்கு இருக்கும் அத்தனை சலுகைகளும், உரிமைகளும் வீட்டிலிருக்கும் பெண்ணுக்கும் உண்டு என்பதை ஒவ்வொரு கணவனும் உணர வேண்டும்.

"அவள் உழைப்பு நமக்கானது" என்ற எண்ணம் மாறி, வீட்டு வேலைகளைத் தோளோடு தோள் நின்று பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் ஆண்களுக்கு வர வேண்டும். அப்போதுதான் சட்டம் தந்த இந்த அங்கீகாரம் முழுமையடையும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சமையலறை இருட்டுக்குள் சுருங்கிப் போகும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளின் வாழ்வில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு விழிப்புணர்வு விளக்கு!

வழக்கு பின்னணி :

கடந்த 2001-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது இழப்பீட்டிற்காக கணவனும், மூன்று குழந்தைகளும் வாகன விபத்து தீர்ப்பாயத்தை (Claims Tribunal) அணுகியபோது, வெறும் ₹2.42 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தொகையை ஏற்க மறுத்த கணவர், நீதிக்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை ₹8.43 லட்சமாக உயர்த்தி, அதற்கு 7.5 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க தீர்ப்பளித்தது.

வழக்கமாக, சாலை விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழக்கும் போது, அவர்களுக்குத் தனியாக நிலையான மாத வருமானம் இல்லை என்ற வறட்டு வாதத்தை முன்வைத்து, மிகக் குறைவான இழப்பீட்டு தொகையை வழங்கும் ஒரு தவறான நடைமுறையே காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே உயர் நீதிமன்றமும் இந்த தொகையை கணக்கிட்டிருந்தது. ஆனால், தியாகத்தின் வடிவமாக விளங்கும் இல்லத்தரசியின் ஆயுள் கால உழைப்பை இவ்வளவு மலிவாகக் கணக்கிடுவதை ஏற்காத அக்குடும்பத் தலைவர், உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) இறுதிப் போர் தொடுத்தார். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க மேல்முறையீட்டு வழக்கை தீவிரமாக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, தற்போது ஒட்டுமொத்தப் பெண்களின் உழைப்பிற்கு மகுடம் சூட்டும் வகையில் அதிரடியான இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: அமேசானின் 'தி டைட்டன் ஸ்டோரி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
இல்லத்தரசிகளின் தியாகத்திற்கு
logo
Kalki Online
kalkionline.com