விமர்சனம்: அமேசானின் 'தி டைட்டன் ஸ்டோரி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு?

Made In India: A Titan Story
Made In India: A Titan Story
Updated on

இப்படித் தான் இருக்கும் என்று கணிக்கவே முடியாதவை உண்டு. சந்தை. செலவுகள். வருமானம். ஆனால் ஒரு நிறுவனத்துக்குத் தேவையானது இது மட்டுமல்ல. அதன் பணியாளர்கள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் அவர்கள் நிறுவனத்துக்காகக் கொடுக்கிறார்கள். அதை விட ஒரு பெரிய சொத்து இருக்க முடியாது.

இந்தியா மாபெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அதை விட முக்கியம் ஒன்று உண்டு. அது சந்தோஷமான நாடாகவும் இருக்க வேண்டும். அதற்கு நாம் உதவினால் அதைவிட வேறென்ன வேண்டும்.

வெற்றியைக் குறித்த தாகம் சற்று சிக்கலானது. அதைத் தேடி ஓட வைக்கும். தோற்பதற்கும் நமக்குச் சுதந்தரம் உண்டு என்று உணரவேண்டும். டாட்டா குழுமத்தில் அதற்கு முழுச் சுதந்தரம் உண்டு.

தவற்றிலிருந்து கற்றுக் கொள்ளாமையே மிகப் பெரிய தவறு. மனத்தில் தைரியம். போட்டியாளர்கள் மேல் பார்வை. இது தான் வெற்றியின் அடிநாதம்.

அவர்கள் ஹிந்தியில் சிந்தித்து ஆங்கிலத்தில் கேட்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேச வேண்டும். கடிகாரங்கள் நேரத்தை மட்டும் காட்டுவதில்லை. ஒரு மனிதனின் ஸ்டேட்டஸும் அதில் தெரியும். பெரிய மனிதர்கள் மட்டும் கட்டும் ஒரு பொருளல்ல கடிகாரம். நம்முடைய கடிகாரங்களைக் கட்டுபவர்கள் அனைவரும் பெரிய மனிதர்கள் என்று உணர வேண்டும். அப்படியொரு கடிகாரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்.

இது ஒரு மாதிரி மட்டுமே. ஒரு தொடரில் சில காட்சிகள் நன்றாக இருக்கலாம். சில வசனங்கள் நெஞ்சைத் தொடலாம். தொடர் முழுதும் இது போலப் பரவியிருந்தால். அது தான் தி டைட்டன் ஸ்டோரி. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது இந்தத் தொடர்.

ஜிம் சரப், நசீருத்தின் ஷா, உள்படப் பலர் நடித்திருக்கிறார்கள். அடிப்படையிலிருந்து தொடங்கி எப்படி ஒரு பிராண்ட் வெற்றி பெற்றது. உலகச் சந்தையில் ஒரு இடம் பிடித்தது. அது சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன? இதைப் பரபரப்பாக, நெகிழ்ச்சியாகச் சொல்லும் தொடர் தான் Made In India: A Titan Story.

சர்சீஸ் தேசாய் என்ற பாத்திரத்தில் ஜிம் ஷரப். டைட்டனின் முதுகெலும்பு. இவருடைய சிந்தனையில் உதித்தது தான் அந்த ஐடியா. டாட்டாவாக நசீருத்தின் ஷா. இரண்டு பேரும் என்ன மாதிரியான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

நஷ்டத்தில் உள்ள டாட்டா பிரஸ் நிறுவனத்தைச் சரி செய்யச் சொல்கிறார் ஷா. அதற்குப் பதில் சம்பந்தமில்லாத ஒரு தொழிலை உருவாக்க நினைக்கிறார் ஜிம். அவருடைய அணுகுமுறை, ஆர்வம், துடிப்பு ஷாவுக்கு பிடித்துப் போக ஒப்புதல் அளிக்கிறார். தொடங்குகிறது ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் கட்டுமானம்.

ஜிம்முடன் அவருடைய நண்பர் ஆகாஷ், இஞ்சீனியர் கௌரவ். மார்கெட்டிங் அலுவலராக வரும் மேகா. மேலாளராக வரும் கோபாலன் என இந்தக் குழுவின் ஒவ்வொரு பாத்திரமும் மனத்தில் நிற்கிறது.

டாட்டா போன்ற மிகப் பெரிய சாம்ராஜ்யம் தான். அதனால் பிரச்சனைகள் வராது இருக்குமா. சந்தையில் இருக்கும் போட்டி. வெளிநாட்டில் நடக்கும் சதி வேலைகள். அனுமதி வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள். இப்படி அனைத்தையும் அலசி இருக்கிறது இந்தத் தொடர்.

ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில் அதில் மூழ்கி விடுகிறோம். அந்தப் பாத்திரங்களோடு ஒன்றி விடுகிறோம். வசனங்களும் ஒளிப்பதிவும் காட்சியமைப்புகளும் நம்மைக் கட்டிப் போடுகின்றன.

டைட்டன் என்ற பெயர் எப்படி உருவானது. அதன் தீம் மியூசிக் எங்கிருந்து எடுக்கப் பட்டது. ஐரோப்பா கடிகாரச் சந்தையில் காலூன்றுவதற்கு நடந்த ஏற்பாடுகள் என்ன. இந்த நிறுவனம் உருவாவதில் தமிழகத்தின் மிகப்பெரிய பங்கு என்ன. அது எப்படி இன்று வரை இந்த மாநிலத்துக்கு நலன் தருகிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தான் இந்தத் தொடர்.

தொடர் முழுதும் நெகிழ்ச்சியாகச் சில/பல நேரங்களில் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்து நாளாகிறது. சண்டை, ரத்தம், கொலை, கெட்ட வார்த்தைகள், ஆபாசம் இதெல்லாம் இல்லாத ஒரு தொடர் எவ்வளவு பெரிய ஆறுதல் இது.

வெற்றி வேண்டும் என்று ஓடும் ஒரு நபரா. ஒரு நிறுவனம் எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள ஆசையா. நம்மால் எதுவும் சாதிக்க முடியவில்லை. சென்ற இடமெல்லாம் நிராகரிப்பு. எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வி. இப்படித் துவண்டு போய்க் கிடப்பவர்கள் பார்க்க வேண்டிய தொடர். நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ தெரியாது. ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டு போகத் தேவையில்லை. மீண்டு எழுந்து ஓடலாம் என்று நம்மை நினைக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
சிரிப்புக்கு பின்னால் இருந்த பெரும் சோகம்: விவேக் நட்ட ஒரு கோடி மரங்களின் நிஜ பின்னணி!
Made In India: A Titan Story

மிகவும் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டியது டாடா - தேசாய் உறவு. என்னதான் நெருக்கமாக இருந்தாலும் உன்னுடைய சவாலை நீ தான் சந்திக்க வேண்டும். எல்லாப் பிரச்சனைகளுக்கும் நான் உதவுவேன் என்று நினைக்காதே. இப்படிச் சொன்னாலும் நெருக்கடியான சூழலில் டாட்டா எப்படி நடந்து கொள்கிறார் என்பது அனைத்து முதலாளிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

அதுவும் ஹொசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பெண்களுக்கு வேலையைக் கற்றுக் கொடுக்க வருகிறார் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர். இவர்களுக்குள் நிகழும் அந்தப் பந்தமும் அதை அவர்கள் இறுதியில் வெளிக்காட்டுவதும் நெகிழ்ச்சி.

இதில் குறைகளே இல்லையா. இருக்கிறது. பிடிக்கவில்லை என்றாலும் பெண்ணுக்கு அடிக்கடி மாப்பிள்ளை அழைத்து வரும் அம்மா. வீட்டில் சாப்பிட்ட ஆள் மிகப் பெரிய டிசைனராக மாறுவது. தேசாய்-ஆகாஷ் இருவருக்கும் நடக்கும் மோதல். சில நேரம் இவை திணிக்கப் பட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

ஆனாலும் இதெல்லாம் மறக்கப் பட வேண்டிய குறைகளே. நல்ல ஒரு கருத்து. ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் வரலாறு. அதைப் பார்க்கும் பொழுது இது போன்ற விஷயங்கள் எல்லாம் கண்டிப்பாக மறக்கவும் மன்னிக்கவும் படக்கூடிய ஒன்றே.

இதையும் படியுங்கள்:
FACES திரைப்பட விமர்சனம்: காதலன் முகமே மறந்துபோனால் என்னவாகும்?
Made In India: A Titan Story

அந்த விதத்தில் ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும் பார்க்கத் தகுந்த தவற விடக்கூடாத ஒரு தொடர் தான் தி டைட்டன் ஸ்டோரி. நம் கண் முன்னால் நம் தமிழ் நாட்டில் நடந்துள்ளது ஒரு மிகப் பெரிய தொழில் புரட்சி. பெங்களூரு செல்லும் அனைவரும் அதை இயல்பாகக் கடந்து செல்கிறோம். அதற்குப் பின் உள்ள உழைப்பு. முன்னேற்பாடுகள். போட்டிகள் போன்றவற்றை உணர்ந்தால் அதை இன்னும் சற்று மரியாதையுடன் பார்ப்போம் என்பது உறுதி.

நாம் தினமும் கடந்து செல்லும் ஹொசூரின் சாலைகளில் ஒரு தொழிற்சாலை மட்டுமல்ல; இந்தியாவின் மிகப் பெரிய தொழில் கனவுகளில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தொடர் உணர வைக்கிறது.

நடிகர்கள் மட்டுமல்ல. இயக்குநர் ராபி கிரேவல் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவும் தனிப் பாராட்டுக்குரியது. ஒரு நிறுவனத்தின் வரலாற்றை வெறும் தகவல்களாகச் சொல்லாமல், உணர்வுகளும் பரபரப்பும் கலந்த ஒரு சுவாரஸ்யமான நாடகமாக மாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை இயக்கம், எடிட்டிங் என ஒவ்வொரு துறையும் அந்தக் காலகட்டத்தை நம்பகத்தன்மையுடன் உயிர்ப்பிக்கின்றன. அதனால் தான் இந்தத் தொடர் ஒரு ஆவணப்படமாகத் தெரியாமல், நம் கண் முன்னால் நடக்கும் வாழ்க்கையாக உணரப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com