

ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் அந்தந்த மாநில அரசு பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், நாய்க்கடி சம்பவங்களுக்கு அவற்றை வளர்ப்பவர்களும், அவற்றுக்கு உணவு வழங்குபவர்களும் பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலும் பெருகிவரும் தெருநாய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்துப் பல புகார் மனுக்கள் நீதிமன்றத்தில் குவிந்து வருகின்றன.
ஒரு பக்கம் தெருக்களில் உலாவரும் நாய்களின் கடியால் பாதிக்கப்படுபவர்கள் மறுபக்கம் தாங்கள் ஆசையாக வளர்க்கும் நாய்களை விட்டுத்தராதவர்கள் என இந்தப் பிரச்சினை இழுபறியாக எந்தத் தீர்வும் இன்றி நாய்களினால் பாதிக்கப்படும் போது மட்டும் இது செய்தியாகிப் பிறகு மறக்கப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பெருகிவரும் தெருநாய்கள் தொல்லை குறித்துத் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. (Supreme Court In Stray Dogs Case). ஜனவரி 13, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிக்கிறது" என்று தெரிவித்தது. இந்த விவகாரத்தில் யாரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது என உறுதியாகக் கூறியதுடன், புதிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
இனி தெரு நாய் கடித்தால், அரசு மற்றும் நாய் உணவு வழங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மாநில அரசுகள் பெரிய அளவில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி தேசிய தலைநகர் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், நாய் கடியால் பாதிக்கப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தெரு நாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் தொடர்பான வழக்கின் மீதான நடவடிக்கைகளாக 2025ம் ஆண்டு ஜனவரி டெல்லியில் தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் வைக்கவும் நவம்பர் 2025-ல் நிறுவனப் பகுதிகளில் உள்ள நாய்களை உடனடியாக அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து அரசுகள் மற்றும் மாநில நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் "ஏபிசி விதிகளை" (Animal Birth Control Rules) செயல்படுத்துவதில் முறையாக செயல்படுத்தாமல் தவறிவிட்டன என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.9 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தால் அதற்கு யார் பொறுப்பு? தெரு நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று வாதிடும் அமைப்புகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? என்றும் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டுள்ளனர். நாய் கடியால் உயிரிழக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் மற்றும் குழந்தைக்கும் சம்பந்தப்பட்ட அரசாங்கமே பொறுப்பு என்றும் பெரும் அபராதம் மற்றும் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் ஜனவரி 20, 2026 அன்று நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையில் நாய்கள் பராமரிப்பு குறித்து மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என மனிதநேய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.