

கடந்த பிப்ரவரி 28-ம்தேதி தொடங்கிய ஈரான்-அமெரிக்கா/இஸ்ரேல் மோதலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் LNG விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு, மருந்துகளின் விலை உயர்வு, பணவீக்கம் உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் செல்வம் பெருமளவில் வீழ்ச்சி மற்றும் பாசுமதி அரிசி போன்ற பொருட்களின் ஏற்றுமதி முடக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, பணப்பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போர் நிலைமை இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் அச்சுறுத்துவதாக உள்ளது. இந்நிலையில் ஈரான் போரால் மூலப்பொருடகளின் விலை அதிரடியாக உயர்ந்ததால் தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் வருகிற 12-ம்தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தென் தமிழகத்தில், முக்கியமாக விருதுநகர் மாவட்டம் (சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர்) சங்கரன்கோவில், காவேரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 320 பகுதி எந்திர தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தென் தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த போரால் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானில் இருந்து தான் மெழுகு, அட்டை, பாலித்தீன் பைகள் ஆகியவை வந்து கெண்டிருந்த நிலையில் போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தி உள்ளன.
இதனால் இந்த மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததால், தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக ரூ.80க்கு விற்பனையான ஒரு கிலோ மெழுகு தற்போது ரூ.150க்கும், பாலித்தீன் பைகள் ரகம் வாரியாக ஒரு கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து உள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வருகிற 12-ம்தேதி முதல் 25-ம்தேதி வரை 2 வாரங்கள் தீப்பெட்டி ஆலைகளை தற்காலிகமாக மூடப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தீப்பெட்டி ஆலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து மாநில அரசு உடனடியாக தலையிட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்களை கண்டுபிடித்து விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.