

மதுரை (Madurai) தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரமாகும். தமிழ்நாட்டின் தூங்கா நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத் துறையிலும் மதுரை இரண்டாம் அடுக்கு நகரமாக உள்ளது என்றே சொல்லலாம். புகழ்பெற்ற ஆயிரம் கால் மண்டபம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இங்கு தான் உள்ளது. அதேபோல் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது.
இவ்வாறு மதுரையின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மதுரை தற்போது அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பில் தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தமிழகத்தின் மதுரை முதலிடத்தில் இருப்பதோடு, தலைநகர் சென்னை 3-வது இடத்தையும், பெங்களூரு 5-வது இடத்தையும், டெல்லி 10-வது இடத்தையும் பிடித்து முதல் பத்து அசுத்தமான நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் நகரங்கள் மற்றும் கிராமங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களின் சுகாதாரமின்மை, சுற்றுலாத் தலங்களின் சுகாதாரமின்மை, திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, கழிவுகளை அகற்றுதலில் திறமையின்மை மற்றும் குடிமக்களின் அலட்சியம் போன்ற பல பிரிவுகளில் நகரங்களின் செயல்திறன் மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் ஸ்வச் சர்வேக்ஷன் அமைப்பு இந்த பட்டியலை தயார் செய்துள்ளது.
அந்த வகையில் மதுரை 4,823 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
முதல் 10 அசுத்தமான நகரங்களில் பட்டியலில் மதுரை முதலிடத்திலும், சென்னை 3-வது இடத்திலும் வந்திருப்பது தமிழர்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாநிலத் தலைநகரும் பெருநகரங்களில் ஒன்றான சென்னை மூன்றாவது இடத்தில் இருப்பது, நகர்ப்புற சுகாதாரம் குறித்த தமிழகத்தின் முயற்சிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மறுபுறம், இந்தூர், சூரத், நவி மும்பை, அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நகரங்கள் தங்களின் சுத்தமான நகரங்களின் புகழைத் தக்க வைத்துக் கொண்டு, தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.
பட்டியலில் 2வது இடத்தில் லூதியானா, 4வது இடத்தில ராஞ்சி, 6,842 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு, 6வது இடத்தில் தன்பாத், 7இல் பரிதாபத், 8வது இடத்தில் 7,419 புள்ளிகளுடன் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீ நகர், 10 வது இடத்தில் 7,920 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் 2024 - 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில், தூய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரை கடைசி (40வது)இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அசுத்தமான நகரங்களில் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை மற்றும் சென்னை ஆகியவை முதல் 10 இடங்களில் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, இந்தியா தூய்மையான, நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை அடைவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.