

இன்றைய வேகமான உலகத்தில், வேலைப்பளு காரணமாக பலராலும் வீட்டில் சமைக்க முடிவதில்லை. இதனால், ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் (Apps) நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இந்தியாவில் இப்போது நிறையப் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்துக்கு மாறிவிட்டனர். ஓடி ஓடி வேலை செய்வதால் வீட்டில் சமைத்து சாப்பிட நேரம் இல்லை. மேலும் சமைக்க நேரமில்லாத போதோ அல்லது வெளியே செல்ல முடியாத போதோ, இருந்த இடத்திலிருந்தே மொபைல் மூலம் உணவை ஆர்டர் செய்துவிடலாம்.
இதனாலேயே நிறையப் பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். இதற்காகவே கொண்டு வரப்பட்ட ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமாட்டோ (Zomato) போன்ற செயலிகள், நம்முடைய உணவு கலாச்சாரத்தையே பெரிய அளவில் மாற்றிவிட்டன. இந்த செயலிகள் மூலம் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஸ்மார்ட்போன் மூலமாக மிக எளிதாக தங்களுக்குப் பிடித்தமான உணவை ஆர்டர் செய்து வாங்க முடிகிறது.
அதுமட்டுமின்றி நம் வீட்டின் அருகில் இருக்கும் சிறிய உணவகம் முதல் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் வரை ஆயிரக்கணக்கான உணவகங்களின் மெனுக்களை ஒரே இடத்தில் பார்த்து தேர்வு செய்ய முடிகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உணவகங்களுக்குச் சென்று காத்திருப்பதைத் தவிர்க்க இது பெரிதும் உதவுகிறது. இந்த செயலிகளில் அடிக்கடி வழங்கப்படும் டிஸ்கவுண்ட்கள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் மக்களை ஈர்க்கின்றன.
இந்நிலையில், ஸ்விக்கி பயனர்களுக்கு சந்தோஷம் தரும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர்களில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் தரக்குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாக உதவி எண்களையும், செயலியில் புகாரளிக்கும் புது வசதியையும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் (ஸ்விக்கி புகார்) அறிமுகப்படுத்தி உள்ளது.
உணவுப் பாதுகாப்பு சார்ந்த புகார்களுக்கு வாடிக்கையாளர்கள் 79482 31850 என்ற பிரத்யேக உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம்.
இந்த எண்ணில் தொடர்பு கொள்பவர்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு கூடுதல் விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர தனி இணைப்பு (Link) அனுப்பப்படும்.
இதற்காகவே ஸ்விக்கி செயலியில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 'Help' பகுதியில் 'Food Safety' என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த உணவின் தரம், சுகாதாரம் அல்லது பேக்கிங் குறைபாடுகள் குறித்து நேரடியாகவும் எளிதாகவும் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைச் சுருக்கமாக எழுதி, அதனுடன் தொடர்புடைய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.
அதாவது நீங்கள் ஆர்டர் செய்த உணவு கெட்டுப்போயிருந்தாலோ அல்லது மோசமான வாசனையுடன் இருந்தாலோ அல்லது உணவில் முடி, பூச்சிகள், பிளாஸ்டிக் அல்லது இதர தேவையற்ற பொருட்கள் கலந்திருந்தாலோ அல்லது உணவு தயாரிப்பிலோ அல்லது பேக்கிங்கிலோ போதிய சுத்தம் இல்லை எனத் தெரிந்தாலோ அல்லது உணவை உட்கொண்ட பிறகு ஏதேனும் ஒவ்வாமை (Allergy) அல்லது உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் உங்களது புகாரை இந்த எண்ணில் பதிவு செய்யலாம்.
முக்கியமாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களைப் பதிவு செய்யும்போது, பாதிக்கப்பட்ட உணவின் புகைப்படம் (Photo) அல்லது சிறிய வீடியோவை ஆதாரமாக இணைப்பது உங்களது புகாருக்கு விரைவான தீர்வு கிடைக்க உதவும்.
இதற்கு, ஸ்விக்கி செயலியின் உங்களது கணக்கு (Account) பகுதியில் உள்ள 'Help & Support' விருப்பத்தைத் தேர்வுசெய்து, சம்பந்தப்பட்ட ஆர்டரைக் கிளிக் செய்து, அதில் 'Food Safety' என்ற புதிய பகுதியைத் தேர்வுசெய்யவும்.
புகாரைப் பதிவு செய்தவுடன் வழங்கப்படும் 'டிக்கெட் எண்' (Ticket Number) மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது புகாரின் மீதான நடவடிக்கையின் நிலையைக் கண்காணிக்கலாம்.
ஸ்விக்கியின் உணவுப் பாதுகாப்பு உறுதி குழு (Food Safety Assurance Team) வாடிக்கையாளர்களின் இத்தகைய புகார்களை உடனடியாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.