

மழைக்காலம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் (H1N1) பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களான ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் (swine flu) வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இதுவரை 2,300 H1N1 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஆண்டு இதே காலத்தில் 229 பாதிப்புகள் மட்டுமே பாதிவாகி இருந்தது.
கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 22 வரை மொத்தம் 4,212 பேருக்கு இன்ஃப்ளூயன்சா (H1N1) காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 300 முதல் 400 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
பன்றிக்காய்ச்சல் (Swine Flu) என்பது இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த H1N1 வைரசால் ஏற்படும் ஒரு வகை சுவாசத் தொற்று நோய் ஆகும். இது எளிதில் மற்றவர்களுக்குப் பரவக்கூடிய தன்மைக் கொண்டது. முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
பொதுவாக ஃப்ளூ என்று குறிப்பிடப்படும் இது, மேல் அல்லது கீழ் சுவாசப் பாதை வழியாகப் பரவி, தொண்டை, நுரையீரல் மற்றும் மூக்கைத் தாக்கக்கூடும்.
பெரியவர்களை விட குழந்தைகளிடம் வயிறு தொடர்பான (வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி )அறிகுறிகள் அதிகமாக தெரியக்கூடும்.
சிறுநீர் குறைதல், வாய் உலர்தல், அதிக சோர்வு, மயக்கம், அதிக தாகம் ஆகியவை நீரிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க சிறிது சிறிதாக அடிக்கடி திரவங்களை கொடுக்க வேண்டும்.
குறிப்பாக வயிறு பிரச்சனை இருந்தால் இது H1N1 என உறுதியாக கூற முடியாது. வேறு தொற்றுக்கும் இதே அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல பொது மற்றும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய அறிகுறிகள்:
திடீர் அதிக காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம்
கடுமையான இருமல் மற்றும் தொண்டை வலி
உடல் வலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் தலைவலி
தொடர்ந்து வறட்டு இருமல்
கடுமையான சோர்வு மற்றும் மூச்சுத் திணறல்
சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி போன்ற உடல் நலக்குறைவுகள் ஏற்படும்.
போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுமக்கள் தாமதப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கோ அல்லது அரசு சுகாதார மையத்திற்கோ சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காய்ச்சல் தானாகவே குணமாகிவிடும், ஆனால் சில சமயங்களில் அது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள் பின்வருமாறு:
65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக 6 மாதங்களுக்கு கீழ் உள்ளவர்கள்
நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவத்திற்கு 2 வாரங்கள் வரை
வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இதயம், கல்லீரல், சிறுநீரக நோய்கள், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பரவும் முறை:
இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, பேசும்போது அல்லது இருமும்போது, அந்த வைரஸ் காற்றில் பரவும் நீர்த்துளிகள் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
வைரஸ் படிந்திருக்கும் பரப்புகளைத் தொட்டுவிட்டு, அந்த கைகளால் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும்போது தொற்று ஏற்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் தடுப்பு முறைகள்:
சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவவும்.
எப்போதும் காய்ச்சிய குடிநீரை அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும்.
கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் (Mask) அணியவும்.
காய்ச்சல் அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் நீடித்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.