T-SAFE - அசத்தும் தெலுங்கானா போலீஸ்!

T-SAFE
T-SAFE
Published on

இப்போதைய சூழலில் பெண்கள் பல காரணங்களுக்காக இரவு பகல் பாராமல் தனியாக பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும் இளம்பெண்களை குறி வைத்து பல வகையான நுட்பங்களை பயன்படுத்தி, அவர்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யும் கொடூரம் நாட்டில் ஏராளமான நடக்கிறது. சமீபத்தில் கூட கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கும்.

இது போன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அரசும், போலீஸ் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முழு அளவில் பலன் கிடைத்த பாடில்லை. இந்நிலையில் தெலுங்கானா போலீஸ் துறையின் பெண்கள் பாதுகாப்பு பிரிவு, தனியாக பயணிக்கும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் வகையில் TSAFEஎனும் பெயரில் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கி, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

தனியாக பயணிக்கும் பெண்கள் இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து தங்கள் மொபைலுக்கு டவுன்லோடு செய்து கொள்ளலாம். பின்னர் அந்த செயலியை ஓபன் செய்து அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்னர் எங்கேயாவது அந்த பெண் பயணிக்கும் நிலையில், அந்த செயலியை ஓபன் செய்து கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்து பயணிக்கலாம். அப்போது முதல் அந்தப் பெண்ணின் பயணத்தை தெலுங்கானா மாநில போலீஸ் துறை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக கண்காணிக்க தொடங்கும்.

இதன் ஒருபகுதியாக அவ்வப்போது அந்தப் பெண்ணுக்கு பயணம் பாதுகாப்பாக உள்ளதா? அல்லது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற கேள்விகள் அனுப்பப்படும். அவற்றுக்கு பதில் அளித்த பின்னர், போலீஸ் துறையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஓடிபி எண்ணை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும். இந்த மொபைல் செயலி மூலமாக தெலுங்கானா போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு பயணிக்கும் அந்த பெண்ணிடம் இருந்து பதில் இல்லாமல் இருந்தாலும் அல்லது தவறான தகவலையோ தெரிவித்தாலும் உடனடியாக அந்த வாகனம் எங்கு இருக்கிறது என டிராக் செய்து கண்டுபிடிக்கும் போலீசார், விரைந்து சென்று அந்த வாகனத்தை மடக்கி பயணியை மீட்பார்கள்.

இதையும் படியுங்கள்:
அது ஜெயிலா இல்ல 5 ஸ்டார் ரிசார்ட்டா?
T-SAFE

தெலுங்கானா மாநில போலீஸ் துறையின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு செயலி, தமிழக போலீசாரால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளான சைலேந்திரபாபு, ரவி உட்பட முக்கிய அதிகாரிகள் இந்த செயலியை பெரிய அளவில் விளம்பரம் செய்து பெண்கள் மனதில் பதிய வைத்தனர். அவர்கள் ஓய்வு பெற்று சென்றதும் அதை அப்படியே விட்டு விட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த செயலி குறித்து மீண்டும், மீண்டும் ஏதாவது ஒரு வகையில் விளம்பரம் செய்திட வேண்டும்.                

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com