TVK Flag
TVK Flag

கட்சி கொடியை அறிமுகப்படுத்திய த.வெ.க!

Published on

இன்று நடிகர் விஜயின் கட்சி கொடி, பாடல் ஆகியவை வெளியாகியுள்ள நிலையில், கட்சி உறுதிமொழியும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியைத் தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்தார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தனது 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியின் முதல் பெரிய மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே மாநாடு நடத்த சிக்கல் ஏற்பட்டது. மாநாட்டுக்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே விஜய் மாநாடு நடத்த இருப்பதாகவும், இதற்காக இடம் தேர்வு உள்ளிட்டவை முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அதற்கு முன்பாகவே கட்சிக் கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிவிக்கப்பட்டுவிடும் என்ற செய்திகள் வெளியாகின. 

அந்தவகையில், கட்சியின் சின்னம் மற்றும் கொடி ஆகியவை வெளியாகியுள்ளது.  சிவப்பு, மஞ்சள் கொடியில் இரண்டு பக்கம் யானைகள் பிளிற நடுவில் வாகை மலருடன் கொடி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, தமன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை வெளியிடுகையில் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் உறுதிமொழியும் வெளியிடப்பட்டது.

"நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும், நம்பிக்கை வைத்து அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.

இதையும் படியுங்கள்:
தமிழக சுகாதாரத் துறை சார்பில் குரங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்!
TVK Flag

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என உளமார உறுதிக் கூறுகிறேன்.

இதுவே கட்சி கொடி அறிவிக்கப்பட்டபோது எடுத்த உறுதிமொழியாகும்.

logo
Kalki Online
kalkionline.com