‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பார்கள். அதுபோல தேர்தல் வருவதற்கு முன்னே, போராட்டங்கள் அதிகளவில் நடப்பது சகஜமாக இருக்கிறது. இந்த போராட்டங்களில் நியாயங்கள் இருக்கிறது என்றாலும், மற்ற நேரங்களில் கண்டுகொள்ளாத அரசு தேர்தல் நேரத்தில் நிறைவேற்றித்தரும் என்று நம்பிக்கை இருப்பதால் போராட்டக்களங்கள் தீவிரமாகின்றன.
இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.3 லட்சத்து 31 ஆயிரம் கோடி. ஆனால் செலவு ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் கோடி. அதாவது பற்றாக்குறை மட்டும் ரூ.41 ஆயிரம் கோடி. இப்படி சூழ்நிலை இருக்கும் அரசு எந்த புதிய அறிவிப்பு வெளியிட்டாலும் அதற்கு கடன்தான் வாங்க வேண்டும். பின்னர் இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். அதனால் கட்டமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியாது. அதனை நன்கு உணர்ந்த அரசும், ஊழியர்களின் போராட்டத்தை மிகவும் லாவகமாக கையாள்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஏபிஎஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கும் வகையில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ அறிவித்தார். அந்த வகையில் தமிழக அரசின் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ சில அம்சங்கள் ஒன்றிய அரசின் ஓய்வூதிய திட்டங்களை காட்டிலும் அதிக சலுகைகளை வழங்குவதாக அமைந்துள்ளது.
தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்துவற்கு ஒரு முறை நிதியாக ரூ.13 ஆயிரம் கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடியும் என ரூ.24 ஆயிரம் கோடி வேண்டும். பின்னர் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். இந்தநிலையில் அரசின் இந்த ஓய்வூதிய திட்டம் பாதகமா? சாதகமா? என்ற பெரிய பட்டிமன்றமே அரசு ஊழியர்கள் மத்தியில் நடக்கிறது. அதற்கான அரசாணை வெளிவந்தால் அதன் முழு விவரம் தெரியவரும்.
* தமிழக அரசு அறிவித்துள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட’த்தின் படி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீத தொகை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழக்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
* தமிழக அரசு திட்டத்தின் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலே ஓய்வூதியம் வழங்கப்படும்.
* ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்கப்படும்.
* தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச பணிக்காலம் நிர்ணயிக்காமல் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை’ உள்ள சலுகைகள் போதாது என்று கூறி சில சங்கங்கள் குறை கூறுகின்றன.
அதாவது, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது பழைய ஓய்வூதியம் திட்டம். இப்போது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) பெயர் மாற்றி அறிவித்து இருக்கிறது. அரசின் அறிவிப்பின்படி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற வேண்டுமென்றால் 30 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படியென்றால் 30 வயதுக்குள் அரசு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள். மற்றவர்களுக்கு 50 சதவீதம் கிடைக்காது.
தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெறும் போது குறிப்பிட்ட தொகை ரொக்கமாக கையில் கிடைத்து விடும்.
இனி அந்த தொகை வராது. எனவே இந்த திட்டம் அரசு ஊழியர்களின் நலனுக்கானது அல்லது எதிரானது. எங்களிடம் இருந்து ஓய்வூதியத்திற்கு 10 சதவீதமும், வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவீதமும் பிடிப்பதால் நாங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் சம்பளம் குறைவாக இருக்கிறது.
எங்களிடம் பிடித்து எங்களுக்கே ஓய்வூதியம் என்பது சரியானதா?. இந்த 10 சதவீத பிடித்தம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சில அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை உறுதி கிடையாது. எனவே முதல்-அமைச்சர் அறிவித்துள்ள திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் ஓய்வூதியப்படி, 50% சம்பளத்தை வாழ்நாள் முழுவதும் வழங்குவதோடு, விலைவாசிக்கு ஏற்ப DA உயர்வையும் தருகிறது. இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு என்றும், ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை உறுதி கிடையாது என்றும் முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் பல அரசு ஊழியர்கள் அரசின் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டம் பற்றி, பலர் சாதகம் என்று ஒரு புள்ளி விவரங்களையும், இல்லை இது பாதகம் என்று சிலர் ஒரு புள்ளி விவரங்களையும் கூறி வருகிறார்கள்.