

குழந்தைகளுக்கு சளி, இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற தொந்தரவுகள் குணமாக மருத்துவர்கள் சளி சிரப்புகளை பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு சளி பிரச்சனையை சரிசெய்ய Almont Kid Syrup என்ற சிரப்பு அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக மூக்கு ஒழுகுதல், தும்மல், கண்களில் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையில் அடிப்படையில் இந்த சிரப் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது புதுச்சேரியில் சிறுநீரகங்களைப் பாதிக்கும் இருமல் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக Almont Kid Syrup விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பீகாா் மாநிலம், ஹாஜிபூா் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘Almont Kid Syrup’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது ஆய்வின் மூலமாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஆய்வு செய்து கண்டறிந்தது.
கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, Almont Kid Syrupபை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது.
இதையடுத்து, தெலுங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அளித்த எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Almont Kid Syrup-பில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது.
எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரகம், மூளை, நுரையீரல் பாதிப்படையும்; இதனால் இந்த Almont Kid Syrup-பை தமிழகத்தில் அனைத்து சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் விநியோகத்தை தடுக்க, மருந்தகங்கள், மருத்துவமனைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மருந்து விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் இது தொடர்பான புகார்களை 94458 65400 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, இம்மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.