

இனி இருமல் சிரப் மருந்துகளை , பாராசிட்டம்மால் மாத்திரைகள் வாங்குவதைப் போல எளிதில் மருந்தகங்களில் வாங்க முடியாது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சில இருமல் மருந்து வகைகள் , இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் பலரையும் பலி வாங்கியுள்ளது. இந்த மரணங்கள் உலகெங்கும் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இதற்காக பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இருமல் சிரப் மருந்தை 'ஷெட்யூல் கே' பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது. இதன் காரணமாக , இனி சாதாரண மருந்து கடைகளில் இருமல் சிரப் மருந்துகள் விற்பனைக்கு கிடைக்காது. இதற்கான சட்ட திருத்தங்கள் மிகவும் கடுமையாக உள்ளன. அதனால் , சாதாரண மருந்து கடைகளில் நாம் காய்ச்சல் தலைவலி மாத்திரைகள் வாங்குவதைப் போல இனியும் இருமல் சிரப் மருந்துகளை வாங்க இயலாது.
இனி அங்கீகாரம் பெற்ற மருந்து கடைகளில் மட்டுமே அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றி இருமல் சிரப்பை விற்பனை செய்ய முடியும். இந்த மாற்றத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களும் வியாபாரிகளும் ஏதேனும் கருத்து தெரிவிப்பதாக இருந்தால், அதற்கு 30 நாட்கள் மத்திய அரசாங்கம் கால அவகாசமும் கொடுத்துள்ளது.
கடும் நடவடிக்கையின் பின்னணி:
இந்தக் கடும் நடவடிக்கைக்கு பின்னணியாக, மத்திய பிரதேசத்தில் தரமற்ற இருமல் சிரப்களை குடித்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் உள்ளது. இதற்கான விசாரணையில் ஈடுபட்டபோது தமிழ்நாட்டை சேர்ந்த போலி மருந்து நிறுவனத்தினால் , அந்த மருந்து தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் குழந்தைகள் குடித்த இருமல் மருந்துகளில் மனித உயிருக்கு ஆபத்தான டைஎதிலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த மருந்தை சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்ரேஷன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ‘கோல்ட்ரிஃப்’ என்ற பெயரில் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தியத் தயாரிப்பு மருந்துகளால் ஜாம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
புதிய விதிகளின்படி மருந்து உற்பத்தியாளர்கள் பின்வரும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மூலப்பொருள் தரம்: மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூலப்பொருளும் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
கட்டாய ஆய்வகப் பரிசோதனை: ஒவ்வொரு தொகுப்பு மருந்தும் விற்பனைக்கு வரும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
பதிவேடுகள் பராமரிப்பு:
மூலப்பொருள் வாங்கியது முதல் விநியோகம் வரை அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்:
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி தொடர்பான சிரப் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி வழங்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.