இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை : வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு..!

TN register office
TN register officeimage credit-Justdial.com
Updated on

தமிழகத்தில் வழக்கமாக நாம் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும், சொத்து பத்திர பதிவு, பட்டா மாற்றம் என பல்வேறு சேவைகளையும் பெறுவதற்கு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். இதற்காக முன் கூட்டியே டோக்கன் பெற்று சட்ட ரீதியான ஆவணங்களை தயார் செய்து சார் பதிவாளர் அலுவலகம் சென்றால் அன்றைய நாள் முழுவதும் அதற்கே போய்விடும். ஏதேனும் ஒரு ஆவணம் இல்லை அல்லது தகவல்களில் தவறு என ஒரு சிறு பிழை இருந்தால் கூட மீண்டும் ஒரு நாள் இதற்காக செலவிட நேரிடும். இந்நிலையில் தான் பொதுமக்களின் இந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய நடைமுறையை கொண்டுவரவுள்ளது.

பதிவுச் செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை குறிப்பிட்ட வகை சொத்து ஆவணங்களுக்கு 'எங்கிருந்தும் பதிவு செய்யும் வசதி'யை (Anywhere Registration) கட்டாயமாக்க உள்ளது.

சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
'ஆன்லைன்' மூலமாக சான்றிதழ்கள்! பத்திர பதிவு துறை அதிரடி!.
TN register office

இந்த வசதியின் மூலம் விண்ணப்பதாரர்கள் பதிவுத்துறையின் இணையதளத்தின் மூலம் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் ஆவணங்களைப் பதிவேற்றிச் சமர்ப்பிக்கலாம். சார்பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பம் கொண்ட பதிவு செய்யப்பட்ட ஆவணம், விண்ணப்பதாரரின் உள்நுழைவு கணக்கு மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக மின்னணு முறையில் வழங்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:

பதிவுத்துறையின் அறிவிப்பின்படி, இந்த முறையின் கீழ் பதிவு செய்யத் தகுதியான ஆவணங்களில் மனைகளின் முதல் விற்பனைப் பத்திரங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் விற்பனைப் பத்திரங்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய விற்பனை ஆவணங்கள், மற்றும் வங்கிக் கடன்கள் தொடர்பான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். பயனர்கள் பதிவுத் துறையின் இணையதளத்தில் உள்நுழைவு கணக்குகளை உருவாக்கி, தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வங்கிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் உட்பட பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரின் ஆதார் விவரங்களும் பதிவேற்றப்பட வேண்டும்; அதேவேளையில், ஆதார் அடிப்படையிலான கைரேகை அல்லது கண் கருவிழி (iris) சரிபார்ப்பு மூலம் அடையாளச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.

இணையவழிப் பதிவுக்குத் தேவையான தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் (UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை எந்திரம் ( பயோமெட்ரிக் சாதனம்) மற்றும் கருவிழிப்படலம் கவரும் கருவி(வெப்கேம் ), புகைப்படக் கருவி போன்றவை) துறை குறிப்பிட்டுள்ளது.

"இது லஞ்சத்தைக் குறைக்கவும், பதிவு அலுவலகங்களில் கூட்டத்தைக் குறைக்கவும், பரிவர்த்தனைகளின் வேகத்தை அதிகரிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பதிவு நடைமுறைகளை எளிதாக்குதல், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளின் வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவையே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள், விபரம் தொடர்பு அலுவலர் பெயர் (டி.சி.எஸ். நிறுவனம்) எண்கள் வருமாறு:-

வன்பொருள்- முகமது யூனுஸ்-7397574067, அருண்குமார்- 9940446694

மென்பொருள் -சீனிவாஸ் கணேஸ்-6369798973, டில்லி பாபு -8525805957.

இதையும் படியுங்கள்:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறை: இனி சொத்தை பத்திர பதிவு செய்ய இந்த ஆவணங்கள் கட்டாயம்..!!
TN register office

இந்த இணையவழி முறை எப்போது முதல் கட்டாயமாக்கப்படும் என்பது குறித்த தேதியைத் வரும் வாரங்களில், துறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com