

தமிழகத்தின் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தேர்தல் முடிவுகளை மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறைகளைச் சீராகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனுமதிகளைப் பெறுவதற்கு சுவிதா (Suvidha) என்ற suvidha.eci.gov.in என்ற இணையதள முறை கட்டாயமாக்கியுள்ளது.
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் தகுதியுள்ள அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்காக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ‘சுவிதா’ இணையதளம் வழியாக பின்வரும் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
* ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துவதற்கு
* தற்காலிக கட்சி அலுவலம் திறப்பதற்கு
* ஒலிபெருக்கியுடன் கூடிய கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு
* ஒலிபெருக்கி இல்லாமல் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி
* ஒலிபெருக்கி தெருமுனை கூட்டம் நடத்துவதற்கு அனுமதி
* ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி
* பேரணி நடத்துவதற்கு அனுமதி
* ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி
* சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் மற்றும் ஒற்றை தூண் விளம்பரப்பலகை காட்சிப்படுத்துவதற்கான அனுமதி
* வாகன அனுமதி
* ஒலிபெருக்கியுடன் கூடிய வாகன அனுமதி
* மேடை, தடுப்புகள் அமைப்பதற்கான அனுமதி
- அனுமதி கோரும் வேட்பாளர்கள், இவற்றுள் எது வேண்டுமோ அதை தேர்வு செய்து குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த டிஜிட்டல் முயற்சி, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து, சமமான வாய்ப்பினை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.