

தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினி திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இத்திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு கடந்த ஆண்டே முயற்சி மேற்கொண்டது. இதன்படி 2026 புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர், கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2025-26 தமிழக பட்ஜெட்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த முறை தரப்படும் மடிக்கணினிகளில் விண்டோஸ் 11 OS மற்றும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயன்படுத்தும் மடிக்கணினிகளை போல், தமிழக அரசு வழங்கும் மடிக்கணினிகளும் அதிநவீன வசதிகளுடன் இருக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரும் நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். இந்நிலையில், இந்தத் திட்டம் ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், “இன்னும் ஒரு சில நாட்களில் கல்லூரி மாணவர்களின் கைகளில் மடிக்கணினி இருக்கும். இலவச மடிக்கணினிகள் அனைத்தும் தயாராகி விட்ட நிலையில், விநியோகப் பணி மட்டுமே மீதமுள்ளது. விரைவில் அந்தந்த மாவட்ட கல்வித் துறைக்கு மடிக்கணினிகள் அனுப்பப்பட உள்ளன. மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு, புத்தாண்டு முடிந்த பிறகு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி மாதத்திற்குள் மடிக்கணினிகள் அனைத்தும் வழங்கப்பட்டு விடும்.
இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியான போதே அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், தேசிய தகவல் மையம் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், லேப்டாப் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் மூன்று முறை கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசினர். அதோடு வல்லுனர் குழுவும் ஏழு முறை கலந்தாய்வுக் கூட்டத்தில் பஙகேற்று, செயற்கை தொழில்நுட்பம் வசதியுடன் உலக தரத்திலான லேப்டாப்பை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
எல்காட் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தத்தில் இருப்பதால், இலவச மடிக்கணினியில் Windows 11 OS நிறுவப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிநவீன பிராசசர் மற்றும் அதிக நேரம் நீடிக்க கூடிய பேட்டரியும் உள்ளது.
எல்காட் நிறுவனம் அமெரிக்காவின் Perplexity நிறுவனத்துடன் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தின் பேரில், ஆறு மாதத்திற்கு Perplexity AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் இசலவச மடிக்கணினியில் பயன்படுத்த முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல் இந்த தேர்தல் ஆதாயத்திற்காக கொடுக்கப்படும் லேப்டாப் அல்ல; முழுக்க முழுக்க மாணவர்களின் நலனுக்காக மட்டுமே கொடுக்கப்படுகிறது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் இலவச மடிக்கணினி பயனுள்ளதாக இருக்கும். ஏஐ தொழில்நுட்பமும் இதில் இருப்பதால், மாணவர்களின் நுண்ணறிவு திறன் மேம்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.