

2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இம்முறையும் வழக்கம் போல் காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உள்ள திட்டங்கள் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் நலன் குறித்துக் கூறுகையில், அவர்களின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்குடன் மாநிலம் முழுவதும் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (CEmONC) செயல்பட்டு வருகின்றன என்றார்.ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 35 என்ற அளவில் மகப்பேறு இறப்பு விகிதமும், ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவில் சிசு இறப்பு விகிதமும் தமிழ்நாட்டில் உள்ளது. இது தேசிய சராசரியை விட மிகக் குறைவு என்பதுடன், பாதுகாப்பான பிரசவங்களை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுவதுடன் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கு 'ஊட்டச்சத்தை உறுதிசெய்' எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
பணிபுரியும் பெண்களுக்கு தங்கள் குழந்தைகளை பராமரிக்க தொழில் பூங்காக்களிலேயே குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், பெண்களின் நெருக்கடி நேரங்களில் உதவிட 'காவல் உதவி செயலி' நடைமுறைக்கு வந்துள்ளது பற்றியும் குறிப்பிட்ட அவர் ஆலயங்களில் பெண் ஓதுவார் நியமனம் அரசின் மகத்தான சாதனை என்றும் குறிப்பிட்டார். 'தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம்' உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு உரிய அதிகாரம் அளித்திடவும் முடிகிறது.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு 'இளஞ்சிவப்பு ஆட்டோ' வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசு, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு(வீடு, மனைகள், விவசாய நிலங்கள்) ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மூன்று லட்சத்து 3,71,705 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஏழை எளிய தாய்மார்களுடைய துயரங்களைத் துடைக்கும் வகையில் குழந்தைகள் பசித்த வயிறுடன் பாடம் படிக்க வரும் நிலையை மாற்றி உற்சாகத்துடன் பயின்றிட 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' வகை செய்கின்றது என்றும், இதன் மூலம் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டவர் இத்திட்டத்திற்காக 1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 'அன்புக் கரங்கள்' எனும் திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி படிப்பினை தொடர்வதற்கு வழங்கியதன் மூலம் இதுவரை 10,637 குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்களை தாங்களே பராமரித்திட இயலாத மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் அரசு 2021-22 ஆம் ஆண்டில் 814 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதிலிருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் 1,433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.