

கடந்த சில வாரங்களாக தமிழக அரசின் பொங்கல் பரிசை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசாங்கம் பொங்கல் பரிசில் வழங்கப்பட உள்ள பொருட்களை பற்றிய குறிப்புகளை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் பொங்கலுக்கு அரசாங்கம் கொடுக்கும் ரொக்கப்பணம் எவ்வளவு இருக்கும்? என்று மக்களிடம் பரவலான விவாதம் தொடங்கியது. தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹1000 வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு 2025-ல் பொங்கல் பரிசாக பணம் கொடுக்காததால் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த ஆண்டு வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொங்கல் பரிசாக தமிழக அரசு நிச்சயம் ரொக்கப்பணம் அளிக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே, இந்த ஆண்டு பொங்கல் பரிசாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கம் வழங்க உள்ளதை தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
டோக்கன் வழங்கப்படும் விவரம்:
வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசை வாங்குவதற்கு வரும் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தினமும் 400 ரேஷன் அட்டைத் தாரர்களுக்கு மட்டுமே, பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக நியாயவிலைக் கடை ஊழியர்கள் மூலம், வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பரிசுத் தொகுப்புகள் தமிழகத்தில் உள்ள 2,22,91,710 ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில்
1 கிலோ பச்சரிசி
1 கிலோ சர்க்கரை
1 முழு கரும்பு
₹3,000 ரொக்கப் பணம்
இலவச வேட்டி மற்றும் சேலை
ஆகியவை உள்ளன.
இந்த பரிசுப் பொருட்களை கொள்முதல் செய்ய முதற்கட்டமாக ரூ.248.44 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
பொங்கல் பரிசு கடந்து வந்த பாதை:
முதன் முதலில் 1980களில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகளில் , கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டது. பின்னர் அத்துடன் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இது எல்லா ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. 2012க்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக ₹1000 வழங்குவதை தொடங்கி வைத்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு பொங்கல் பரிசாக ₹2500 வழங்கி இருந்தது. தற்போது பொங்கல் பரிசாக அதிகபட்ச ரூபாயாக ₹3000 வழங்கப்பட உள்ளது.