

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஜன. 10), பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய முடிவிற்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூக நீதிக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பைச் செயல்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் குறித்தும் சில ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார். கணக்கெடுப்பிற்கான வழிகாட்டுதல்கள் பற்றி விரிவாக விவாதிக்க மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது , சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவின் மூலம் நம்பகமான , தெளிவான , விரிவான தரவுகளை பெற்று சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யவும் முடியும். அரசின் நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் முடியும்.
இந்த திட்டம் மாநில தமிழக அரசின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இது சம்மந்தமாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு , ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக நீதிக்கான தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய ஒன்று. பல்வேறு மாநிலங்களில் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும். இதில் எதிர்பாராத சமூகப் பதட்டங்களை உருவாக்கும் சாத்தியக் கூறுகளும் இருக்கக் கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. அதனால் , இந்தக் கணக்கெடுப்பினை மேற்கொள்ள கேள்விகள் , பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் ஆகியவை தெளிவாகவும் துல்லியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு இருந்தால் தான் பொதுவான நம்பிக்கையை உறுதி செய்ய முடியும். இல்லாவிட்டால் , இந்த திட்டத்தில் உள்ள உள்ள குறைகள் , சர்ச்சைகள், துல்லியமின்மை ஆகியவை சமூகத்தில் பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கும்.
இந்த செயல்பாடு ஒன்றிய அரசின் கீழ் இருந்தாலும், அதில் பெறப்படும் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவை மாநில அளவிலான கொள்கைகளை கடுமையாக பாதிக்கும் என்பதால் , இந்தப் பணி தொடர்பாக வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை , ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு முடிவு எடுப்பது அவசியமாகும்.
இந்த ஆலோசனை ,மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் முக்கியமான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும். அதனால் , சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த வழிகாட்டுதல்கள் பற்றி விவாதித்து மேம்படுத்திட , மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்க வேண்டும்.
இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்தும் தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் , கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படும் என்று நான் நம்புகிறேன், என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.