

நிலத்தடி நீரை அதிகம் எடுப்பதால் தமிழ்நாடு நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், அதிலும் 10 மாவட்டங்கள் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும் மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் நிலத்தடி நீரே மனிதகுலத்தின் மிகப்பெரிய சேமிப்பு கிடங்காகும். ஆனால் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மக்கள்தொகை, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல் மற்றும் மிதமிஞ்சிய பயன்பாடு காரணமாக தமிழ்நாட்டின் நிலைத்தடி நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவை சந்தித்து வருவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திலும் இந்த நிலை நீடிப்பது மேலும் அதிர்ச்சிகரமான தகவலாகவும் இருக்கிறது. 2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டின் ஆண்டு நிலத்தடி நீர் மறுஊட்டம் 22.61 பிசிஎம் ஆக (BCM) உள்ளது. ஆனால், இதில் கணிசமான அளவு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழ்நாடு நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் ஒட்டுமொத்தமாக பாதி நெருக்கடி நிலையில் இருப்பதாக இந்தியாவின் இயற்கையான நிலைத்தடி நீர் வளங்கள் குறித்து மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்கள் அதிகடுமையான சுரண்டல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, மழை மூலம் பூமிக்குள் செல்லும் நீரைவிட, எடுக்கப்படும் நீரின் அளவு மிக அதிகம் என கூறுகின்றனர்.
அதாவது நிலத்தடி நீரை 70 சதவீதத்துக்கும் குறைவாக பயன்படுத்தும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையில் பயன்படுத்தும் பகுதிகள் பாதி நெருக்கடி நிலையில் இருப்பதாகவும், 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பயன்படுத்தும் பகுதிகள் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், 100 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தும் பகுதிகள் அதி தீவிர நிலையில் இருப்பதாகவும் வரையறுக்கப்படுகிறது.
அந்த வரிசையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்துவதில் 73.5 சதவீதம் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் எந்த நிலையில் இருக்கின்றன என்ற விவரங்களும் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.
அதில் சென்னை, திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்கள் நிலத்தடி நீரை அதிகம் (Over-exploited) பயன்படுத்துவதில் மாவட்டங்கள் இந்த சிவப்புப் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கிருஷ்ணகிரி மாட்டங்கள் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான நிலத்தடி நீரை மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, ராணிபேட்டை, தென்காசி, தேனி, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையில் நிலத்தடி நீரை பயன்படுத்தி பாதி நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்கள் 70 சதவீதத்துக்கும் குறைவான நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
2025-2026 நிலவரப்படி, காவிரி டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகர்ப்புறப் பயன்பாட்டிற்காக இந்த மாவட்டங்களில் நீர் அதிக அளவில் எடுக்கப்படுகிறது. இதனால், பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 20 மீட்டருக்கும் கீழ் சென்றுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதத்துடனான சராசரி நிலத்தடி நீர்மட்ட அளவை, பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்ட சராசரி நிலத்தடி நீர்மட்ட ஒப்பிடுகையில், குறைந்து இருக்கிறது. நடப்பாண்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன் 0.11 மீட்டர் முதல் 0.86 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 0.07 மீட்டர் முதல் 2.58 மீட்டர் வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்காக சார்ந்திருக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவையும் ஆழ்துளைக் கிணறுகளும் தங்கள் நீர்வளத்திற்கு பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருக்கின்றன.
நகர்புறங்களில் குடிநீர் மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான நிலத்தடி நீர் தேவை கடந்த ஆண்டுகளை விட 4 மடங்கு அதிகரித்திருப்பதாகவும், மற்றொரு விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழ்நாட்டில் நீர்மட்டம் சரிந்து வருவது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் நீரின் தரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றும், பல மாவட்டங்களில் நைட்ரேட் மற்றும் புளோரைடு அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீரில் அதிகமாக இருப்பது கண்டறியப்ட்டிருக்கிறது என்றும், கடலோர மாவட்டடங்களில் கடல்நீர் உட்புகுவதால் நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவருகிறது என்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த அபாயத்தை உணர்நது அரசும், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கையில் எடுக்கவில்லை என்றால் நீருக்கான தேவையை கட்டாயம் ஒருநாள் புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.