

தேர்தலில் விஜய்யின் எதிர்பாராத எழுச்சி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், திமுக மற்றும் அதிமுக போன்ற வலுவான கட்சிகளையும் பாதித்துள்ளது. இந்தத் தேர்தல் போக்குகளுக்கு மத்தியில், பங்குச் சந்தையில் சன் டிவி நெட்வொர்க்கின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்து இன்றைய வர்த்தகத்தில் ரூ.547.55 என்ற குறைந்தபட்ச விலையை எட்டியது.
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 23-ம்தேதி நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனை போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 74 தொகுதிகளில் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதுமட்டுமின்றி பெரும் அதிர்ச்சி தரும் விஷயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தவெக வேட்பாளரிடம் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் இத்தோல்வி ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத் தேர்தல் அரசியலில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. திமுகவின் கோட்டை என கருதப்பட்ட சென்னையில் தவெக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
கலாநிதி மாறனின் கட்டுப்பாட்டில் உள்ள சன் குழுமத்தின் ஒரு பகுதியான சன் டிவி பங்குகளில் ஏற்பட்ட சரிவு, வர்த்தக அமர்வின் போது நிறுவனத்தின் மதிப்பீட்டில் சுமார் ரூ. 2,300 கோடி சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், சன் டிவி நிறுவனத்தின் பங்கு மதிப்பு காலை வர்த்தகம் தொடங்கும் போது 611 ரூபாயாக இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தவெக முன்னிலை வகித்து, திமுகவுக்கு எதிராக மாறிய நிலையில் படிப்படியாக இந்நிறுவன பங்குகள் சரிந்து ஒரு பங்கு மதிப்பு ரூ.547.55 என கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை குறைந்துவிட்டது.
அதுமட்டுமின்றி, சன் டிவி நிறுவனம் அதன் நிறுவன மதிப்பீட்டில் குறிப்பிடத்தக்க இழப்பையும் சந்தித்துள்ளது. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் நிறுவனத்தின் மதிப்பீடு ரூ.23,825.21 கோடியாக இருந்த நிலையில் நேற்று தேர்தலில் திமுகவின் தோல்வி முகத்திற்கு பிறகு அதன் மதிப்பீடு ரூ.21,562.8 கோடியாகக் குறைந்தது.
அதாவது, வர்த்தக அமர்வின் போது சுமார் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் கிடைத்த லாபம் அனைத்தையும் இழந்து முதலீட்டாளர்கள் தற்போது தத்தளித்து வருகின்றனர்.