

தமிழ்நாட்டில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இலவச பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதன்மூலம் தமிழ்நாட்டில் எண்ணற்ற எளிய மக்கள் பயனடைவார்கள்.
ஆட்சேபனையற்ற அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக நிலமில்லாத ஏழை மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இதில் தகுதியான ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
* ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து வீடு கட்டி வசித்து இருக்க வேண்டும்.
* சொந்தமாக வீடோ அல்லது நிலமோ இருக்கக் கூடாது.
* குடும்பத்தின் ஆண்டு வருமானமானது, ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
இலவச பட்டாவின் நில அளவு:
* கிராமப் பகுதிகளில் 2 முதல் 2.5 சென்ட் நிலம் வரையிலும், நகர்ப் பகுதிகளில் 1.25 முதல் 1.5 சென்ட் வரையிலும் இலவச பட்டா வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
தகுதியுடைய மக்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையம் வழியாக இலவச பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.
வட்டாட்சியர் அலுவலகம் அல்லது மக்கள் குறை தீர்க்கும் முகாமில் இலவச பட்டா வேண்டி, உரிய ஆவணங்களுடன் நேரடியாக மனு அளிக்கலாம்.
விதிவிலக்கான இடங்கள்:
வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள், காடுகள், சாலைகள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய நிலங்களில் வசிப்போருக்கு அவ்விடத்தில் இலவச பட்டா வழங்கப்படாது. இவர்கள் பட்டா வேண்டி விண்ணப்பித்தால், மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச பட்டா வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டதன் மூலமாக, விடுபட்ட ஏழை மற்றும் எளிய மக்கள் தங்களது வசிப்பிடத்திற்கு எளிய முறையில் பட்டாவைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்:
* ரேஷன் கார்டு
* ஆதார் அட்டை
* வாக்காளர் அடையாள அட்டை
* சாதிச் சான்றிதழ்
* வருமானச் சான்றிதழ்
* மின்சார கட்டண ரசீது
* வீட்டு வரி ரசீது
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* நிலமற்ற ஏழை என்பதற்கான சுய சான்று
மேற்கண்ட ஆவணங்களுடன் மனு அல்லது இ-சேவை மைய ஆனலைன் விண்ணப்பப் படிவத்தை இணைத்து, வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சமர்ப்பிக்கலாம்.
உங்கள் பகுதி விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இலவச பட்டா வழங்கப்படும்.
இலவச வீட்டு மனை பட்டா திட்டம் நீட்டிக்கப்பட்டதன் மூலம், சமீபத்தில் ஒரே இடத்தில் 5 ஆண்டுகளை நிறைவடைந்த மக்கள் உடனடியாக விண்ணப்பிக்க முடியும். அதோடு இந்த ஒரு வருட நீட்டிப்பு காலத்தில் 5 வருடங்களை நிறைவடையப் போகும் பயனாளிகளும் பயனடைவார்கள். ஏழை மக்களின் நலன் கருதி முதல்வர் விஜய் எடுத்த இந்த முடிவு, தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.