

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்த முடிந்து வெற்றி பெற்ற கட்சியினர் ஆட்சியிலும் அமர்ந்து விட்ட நிலையில் தற்போது காலியாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்துள்ளது.
எம் பி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 1ம்தேதி துவங்கி ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஜூன் 8 என்றும் வாபஸ் பெற 11ஜூன் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினருமான சி.வி.சண்முகம் தனது எம்.பி. பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றதால், சட்டப்படி தனது ராஜ்யசபா பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பொருட்டு, புதுடெல்லியில் துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா சபாநாயகருமான ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடி ராஜினாமாவை தொடர்ந்து, தமிழகத்திற்கான ராஜ்யசபா எம்.பி. இடங்கள் வரிசையில் ஒரு இடம் காலியானது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது காலியாக உள்ள அந்த ஒரு இட நிரப்பலுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த நாடாளுமன்ற மாநிலங்களவை பதவியிடத்திற்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. காரணம் போட்டி இருந்தால் எம்எல்ஏக்கள் வாக்களித்து தமிழ்நாட்டிற்கான ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களை வைத்துள்ளதால் ராஜ்யசபா இடைத்தேர்தலில் தவெக எளிதாக வெல்ல முடியும் என்றும் அதிக எம்எல்ஏக்கள் உள்ளதால் ஜூன் மாதம் தவெவிற்கு முதல் எம்பி பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைத்தேர்தல் என்பது ஒரு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பதவி காலியாகும்போது நடத்தப்படும் தேர்தல் ஆகும். தற்போது சி.வி.சண்முகத்தின் ராஜினாமா காரணமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்த தவெக எம்.பி பதவியும் பெற்று பாராளுமன்றத்தில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றனர்.
தேர்தல் கால அட்டவணை:
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஜூன் 1, 2026
வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஜூன் 8, 2026
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: ஜூன் 9, 2026
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜூன் 11, 2026
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை: ஜூன் 18, 2026
பொதுவாக நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் சி.வி.சண்முகத்தின் ராஜினாமாவால் ஏற்படும் ஒரு இடைத்தேர்தல் என்பதால், இதில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய உறுப்பினருக்கு முழுமையான 6 ஆண்டுகால பதவிக்காலம் கிடைக்காது.
இதனை தேர்தல் ஆணையம் தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, புதிய உறுப்பினராக பொறுப்பேற்பவர் சி.வி.சண்முகத்தின் மீதமுள்ள பதவிக்காலமான 2028 ஜூன் 29-ஆம் தேதி வரை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.