

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நடைபெற்று தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் வெளியிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் அனைத்தையும் தமிழக அரசு இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படாததால், தற்போதைய அரசியல் நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் மே 13ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை தமிழக அரசின் சார்பில், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல், போக்குவரத்து, சாலை மேம்பாடு மற்றும் உள்ளாட்சித் துறைகள் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களுக்காக டெண்டர்கள் வெளியாகி இருந்தன. இன்றைய தினம் இந்த டெண்டர்கள் அனைத்தையும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்த அறிவிப்பின் பின்னணியில் , டெண்டர்கள் பற்றிய வெளிப்படை தன்மையும் அது கோரப்பட தேவைப்படும் அவகாச காலத்தையும் சரிவர கொடுக்கவில்லை , என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டினை கிளப்பியிருந்தன.
டெண்டர்கள் மிகவும் அவசரமாக கோரப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகின்றன. குறுகிய கால டெண்டர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே விண்ணப்பிக்க அவகாசமாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முயற்சி குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக அமையும் என்ற குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்த சர்ச்சைகளை அடுத்து தமிழக அரசு ,டெண்டர்கள் வெளியிடப்படும் போது ,அவை அனைத்தும் ஒப்பந்த நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் , அதன் வெளிப்படத் தன்மை சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், என்று தமிழக அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய அளவிலான கட்டுமான பணிகள், நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் , குடிநீர் திட்டங்கள் போன்றவற்றில் வெளியிடப்படும் டெண்டர்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
எதிர்காலத்தில் டெண்டர்கள் வெளியிடப்படும் போது ஒப்பந்தம் கோருவதற்கு , குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை, பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யலாம்.
தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ள டெண்டர்களை ஆய்வுக்கு உட்படுத்தி , போதிய கால அவகாசத்துடன் கூடிய புதிய தொண்டர்களை விரைவில் வெளியிட உள்ளது, என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் முக்கியமான விவாத பொருளாக மாறி உள்ளது.