பயிர்கடன் தள்ளுபடி வேண்டுமா? அப்போ இது அவசியம் - முழு தகவல் இதோ..!

farmers, CM Vijay
farmers, CM Vijay
Updated on

தமிழ்நாட்டில் சிறுகுறு விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பெறுவதற்கு விவசாயி அடையாள எண் அவசியமாகும். அந்த எண்ணை பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, கடந்த மே 25-ம்தேதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இது கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பின்படி, தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களது பயிர்க்கடன் தள்ளுபடியைப் பெற வேண்டுமானால் விவசாய அடையாள எண் பெற்றிருப்பது அவசியமாகும். இந்த அடையாள எண்ணை இன்னும் பெறாத விவசாயிகள் வரும் ஜூன் 15-ம்தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அடையாள எண் பெறுவது எப்படி?

மத்திய அரசின் அக்ரிஸ்டாக் (AgriStack) மற்றும் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுதளத்தின் (TN Farmer Registry) கீழ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் விவசாயி அடையாள எண் (Farmer ID) ஆகும். இதன் வாயிலாக விவசாயிகளின் பதிவுகள் துல்லியமாக பராமரிக்கப்படுவதுடன் அரசு நலத்திட்டங்களை எளிதில் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? யாருக்கெல்லாம் கிடைக்காது..?
farmers, CM Vijay

அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடித் தொகை விவசாயிகளின் கணக்கிற்குச் சரியாகச் சென்றடைவதையும், முறைகேடுகளைத் தவிர்ப்பதையும் உறுதி செய்ய இந்த விவசாய அடையாள எண் பயன்படுகிறது. இதனைப் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ:

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் (e-Sevai Centers) அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி தேவையான ஆவணங்களை அளித்து இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் (Play Store) உள்ள 'Farmer Registry TN' என்ற அதிகாரப்பூர்வ செயலி மூலமாகவும் நேரடியாகப் பதிவு செய்யலாம்.

அல்லது உழவன் செயலி (Uzhavan App) அல்லது அரசின் அதிகாரப்பூர்வ வேளாண் போர்ட்டல் மூலமாகவும் தேவையான விபரங்களைப் பதிவேற்றம் செய்து இந்த அடையாள எண்ணைப் பெற முடியும்.

விண்ணப்பித்த விபரங்கள் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறையினரால் சரிபார்க்கப்பட்ட பின், விவசாயிகளுக்குப் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை (Aadhaar Card) - ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விவசாய நிலத்தின்(Land Documents) பட்டா, சிட்டா, அடங்கல் நகல்கள், நில விவரங்கள் மற்றும் சர்வே எண்.

வங்கி கணக்கு விபரங்கள்.

குடும்ப அட்டை (Ration Card) நகல்.

விவசாயியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

மொபைல் எண்: ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.

விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், வரும் ஜூன் 15-ம்தேதிக்குள் தங்களது அடையாள எண்ணைப் பெற்றுப் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com